பதிலடி

உலக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் சம்பவம், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘கூ’ செயலியில் நைஜீரிய அரசு தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது தான். இப்படி ஒரு முடிவை நைஜீரிய அதிபர் எடுக்க என்ன காரணம். நைஜீரியாவில் 1967ம் ஆண்டு முதல் 1970 வரை உள்நாட்டு போர் நடந்தது. இந்த போரில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகின்றன. இது அந்நாட்டு அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இவர்களை எச்சரிக்கும் வகையில் நைஜீரிய அதிபர் முகமது புகாரி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதில் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதிபரின் இந்த பதிவு, வன்முறையை தூண்டும் வகையிலும், தங்கள் விதிமுறைகளுக்கு எதிராகவும் இருப்பதாக கூறிய டிவிட்டர் நிறுவனம் அவரது பதிவை நீக்கிவிட்டது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நைஜீரியாவில் டிவிட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரை ரகசியமாக பயன்படுத்தும் மக்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது. இது மக்களின் பேச்சுரிமையை பறிக்கும் செயல் என்று நைஜீரிய அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, நைஜீரிய அரசுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளதால் உள்நாட்டு போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நைஜீரிய அதிபர் நாட்டு மக்களுக்கு சொல்லும் தகவல்களையும், பிறப்பிக்கும் உத்தரவுகளையும் உடனுக்குடன் கொண்டு செல்ல டிவிட்டரை போன்ற ஒரு சமூக வலைதளம் அவசியம் என்பதை உணர்ந்த அதிகாரிகள், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியில் தங்களது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளனர். இனி ‘கூ’ செயலி மூலமே நைஜீரிய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய அதிபரின் இந்த நடவடிக்கை உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு செயலிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவுகளை பகிர்வதற்கு பயன்படுத்த முன்வந்துள்ளது பெருமையாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ‘கூ’ தளம் இந்தியாவை கடந்து சிறகை விரித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று அதன் நிர்வாகிகள் பெருமிதம் அடைந்துள்ளனர். டிவிட்டர்  நிறுவனம் நைஜீரிய அதிபரின் கணக்கை நீக்கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்திய செயலியை பயன்படுத்தியதன் மூலம் டிவிட்டர் நிறுவனத்துக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது நைஜீரிய அரசு….

Related posts

அடுத்த அசத்தல்

‘மூன்றில் ஒரு பங்கு’

பாஜ அரசின் அவலம்