பதவிக்கு வரணும்னு இலை கட்சியில் செய்த ரகசிய பூஜையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள்… ஆனால், இலை கட்சியில் என்ன செய்தாங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரரு இலைகட்சிக்கு பொதுச் செயலாளர் ஆகணும் என்று, அவரது அடிப்பொடிகள் ஒவ்வொரு விதத்திலும் மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிக்கிறாங்க. சிலர் இதையே காரணமா வைத்து கரன்சியை கறக்குறாங்களாம். இதில் மாங்கனி மாவட்டத்தில் அணை இருக்கும் ஊர் எம்பி ஒருவர் நடத்திய யாகம், அரசியல் களத்தில் சூட்டை கிளப்பி இருக்கு. எம்பியின் ஊருக்கு பக்கத்தில்  இருக்கும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் ஒன்றில், அதிகாலை தொடங்கி பல மணிநேரம் யாகம் நடந்ததாம். அதற்கு ஏற்பாடு செய்தவர் இந்த எம்பி தானாம். அதில், ஒன்றியம், வட்டம் எல்லாம் கலந்து கிட்டாங்களாம். நிரந்தர பொதுச்செயலாளராக சேலம்காரர் தான் வரணும். இதற்கு அம்மன் அருள் புரியணும் என்று, யாகத்தில் எம்பி கண்ணீர் மல்க வழிபட்டாராம். இப்படி வழிபட்டவரு, ‘இது மிகவும் சக்திவாய்ந்த கோயில். சேலம்காரர் ஆனபிறகு, 2தடவை இங்கு வந்து சாமி கும்பிட்டாரு. தேனிகாரருரும், சின்னமம்மியும் கூட இங்கே வந்து சாமி கும்பிட்டு அவங்களோட வேண்டுதல் நிறைவேறியதா சொல்லி இருக்காங்க. சாதாரண வழிபாட்டுக்கே வரம் கொடுக்கும் அம்மன், எங்க யாகத்துக்கு சத்தியமா பெரும்பலனை குடுப்பாங்க. சேலம்காரர் ஜெனரல் செகரட்டரி ஆவது கன்பார்ம்  என்று, எம்பி ஆனந்த கண்ணீர் வடிச்சாராம். இதை பார்த்து அவரது அடிப்பொடிகள் அப்படியே புல்லரிச்சு நின்னாங்களாம்… அண்ணே நீங்க சொன்னது நிச்சயம் நடக்கும்னு உசுப்பேற்றி விட்டாங்களாம்…’’என்றார் விக்கியானந்தா.‘‘ரெய்டு நடந்ததால் மாஜி அமைச்சரைவிட, அவங்க குடும்பத்தினர் ரொம்ப அப்செட்டில் இருக்காங்களாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தில் மாஜி அமைச்சர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அவரது வீடு உட்பட மாநிலம் முழுவதும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். ஆவணங்கள் கைப்பற்றியதை பற்றி அவங்க கவலைப்படல, ஆனால் பென் டிரைவ் விஷயத்தில அப்செட் ஆகி இருக்காங்களாம். மாஜி அமைச்சர் எல்லாவற்றையும் ஸ்கேன் செய்து ஆவணங்களை டிஜிட்டலாக மாற்றி வைத்துள்ளாராம். அது ஒன்று போதும் மாஜி அமைச்சரின் எல்லா தில்லாலங்கடியையும் காட்டி கொடுத்துவிடுமாம். இதுதான் மாஜி அமைச்சர் மட்டுமின்றி அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குழப்பத்திலும், கலக்கத்திலும் இருப்பதற்கு காரணமாம். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் முதலில் வாழ்த்து தெரிவித்ததில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் படம் இருந்தது. பின்னர் இரண்டாவதாக பண்டிகையை மாற்றிய பின் ஓபிஎஸ் படம் மாயமாகி இருந்தது. மாஜி அமைச்சரின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஐடி விங் போன்ற சோசியல் மீடியா பணிகளை அவரது 2வது மகன் டாக்டர் இன்பன் கவனித்து வரும் நிலையில் மாஜி அமைச்சர் மட்டுமின்றி அவரது குடும்பமே தற்போது குழப்பத்தில் இருக்காம். இருந்தாலும் அவரது 2 மகன்கள் அப்பா நாங்க இருக்கோம் பார்த்துக்கிறோம் என்று தைரியம் சொல்லி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ அதிகாரிகள் தொல்லை தொடர்ந்து நீடிக்கும் தூங்கா நகர மாவட்டத்தை பற்றி சொல்லேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில், மகளிர் சுய உதவிக்குழுக்களின், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திறப்பு விழா 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. வணிகவரித்துறை அமைச்சர் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, திறக்கும் போது, ஊராட்சி மன்றத்தலைவர் அமைச்சரிடம் ஒரு விஷயத்தை காதில் போட்டுவிட்டாராம். ‘‘இந்த வணிக வளாகம் எனது ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழா குறித்து முறையாக அதிகாரிகள் சொல்லல. இந்த ஊரில் உள்ள மகளிர் குழுவுக்கு ஒரு கடை கூட ஒதுக்கல. திறப்பு விழாவிற்கு முன்பாகவே அனைத்துக்கடைகளிலும், அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவான மகளிர் குழுவை நியமித்து, பொருட்களை கடையில் ஏற்றிட்டாங்க’’ என வேதனையுடன் சொன்னாராம். இதற்கு அமைச்சரும், ‘‘எனக்கு இதுபற்றி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. உள்ளூர் மகளிர் குழுவுக்கு இடம் கொடுக்காமல் எப்படி வணிகவளாகம் செயல்படும். இந்த பகுதியை சேர்ந்த மகளிர் குழுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா. அதுவும் எனது தொகுதியில், எனக்குத்தெரியாமல் இப்படி அதிகாரிகள் செயல்படலாமா. மகளிர் குழுவின் பெயரை எழுதிப்போட்டு, அனைவருக்கும் முன்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து இருக்கலாமே. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், இன்னும் அதிகாரிகள் மாறாமல் இருக்கிறார்களே…’’ என்று அதிகாரிகளை எச்சரித்தாராம். ஆனாலும் அதிகாரிகள் வழக்கம்போல வேறு பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.           …

Related posts

ஒரு மாதத்தில் இலை கட்சியில் மாற்றம் வரும் என நிர்வாகிகளுக்கு வைத்தி ‘டானிக்’ கொடுத்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

நிக்காம போன ரயிலு… இதுதான் ஒன்றியத்தின் லட்சணம் என்கிறார்: wiki யானந்தா