பண்ணை குட்டை அமைக்க தோண்டிய பள்ளத்தில் நீள வடிவிலான தொட்டி, 3 பானைகள் கண்டெடுப்பு

* புதையல் கிடைத்ததாக வருவாய்த்துறையினர் ஆய்வு* மக்கள் குவிந்ததால் செய்யாறு அருகே பரபரப்புசெய்யாறு:  செய்யாறு அருகே பண்ணை குட்டை அமைத்தபோது நீள வடிவிலான தொட்டியில் மூன்று பானைகள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பானைகளில் புதையல் கிடைத்ததாக வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரை கிராமத்தில் சேகர் என்பவரது நிலத்தில் அரசு மூலம் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று ஊரக வளர்ச்சித் துறையினர் ஆய்வு செய்ய வந்தனர். அப்போது பணியின்போது நீள வடிவிலான தொட்டி, கருப்பாக இரண்டு பானைகளும், செம்மண் நிறத்தில் ஒரு பானையும் இருந்தது தெரியவந்தது. அதில் புதையல் இருக்கக் கூடும் என இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தாசில்தார் சு.திருமலை, மண்டல துணை தாசில்தார்கள் தேவி, தேவராஜ், வருவாய் ஆய்வாளர் தண்டபாணி, கிராம நிர்வாக அலுவலர் ராகவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி  மூலம் சுமார் 2 அடி ஆழத்தில் தோண்டி பார்த்தனர். அதில், நீள வடிவில் ஒரு தொட்டியும், சேதமடைந்த நிலையில் சாதாரண மண் பானைகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர், சேதமடைந்த 3 பானைகளும், நீள வடிவிலான சேதமடைந்த தொட்டியும் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. மண்பானைகளை சோதனை செய்தபோது அதில் மண் மட்டுமே இருந்ததாக தெரிவித்தனர். பூமிக்கடியில் கிடைத்த நீள வடிவிலான தொட்டியும், 3 பானைகளும் எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து கண்டறிய வருவாய் துறையினர் வேலூரில் செயல்பட்டு வரும் தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, தொல்லியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு பூமிக்கடியில் தோண்டப்பட்ட மண் பானைகள் தொன்மையானதா? தற்போதைய காலகட்டத்தில் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்வார்கள் என தாசில்தார் திருமலை தெரிவித்தார். பூமிக்கடியில் 3 பானைகளும், நீள வடிவத்தில் தொட்டியும் கிடைத்ததாக தகவல் பரவியதும், கிராம மக்களிடையே புதையல் கிடைத்துவிட்டதாக தகவல் பரவியது. இதனால்  அவற்றை பார்வையிட ஏராளமான கிராம மக்கள் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு