பணி நடந்து முடிந்ததுபோல் பெயர் பலகை வைத்து மயான சாலை அமைக்காமல் ரூ.12.88 லட்சம் கையாடல்: அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்

ஸ்ரீபெரும்புதூர்: துளசாபுரம் ஊராட்சியில் மயான சாலை அமைக்காமல் ரூ.12.88 லட்சத்தை கையாடல் செய்தத கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சி கண்டிவாக்கம் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு என சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் கண்டிவாக்கம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் சடலத்தை எரிப்பது மற்றும் ஈமச்சடங்கு நடத்தி வருகின்றனர். கண்டிவாக்கம் காலனி முதல் சுடுகாடு வரை உள்ள சுமார் 3 கிமீ தூரமுள்ள சாலையை சீரமைக்க கடந்த 2020-21ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்  ரூ.12.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கான டெண்டர் கடந்த ஆண்டு விடப்பட்டது. ஆனால், டெண்டர் எடுத்தவர்கள் சாலை அமைக்காமல், அங்கே ஜல்லிக்கற்களை மட்டும் கொட்டி சாலை அமைத்தது போல் புகைப்படம் எடுத்து, பணத்தை கையாடல் செய்துள்ளனர் என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், மயான சாலையில் பணி நடந்து முடிந்ததுபோல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கண்டிவாக்கம் காலனியில் சுடுகாடு செல்லும் சாலையை கடந்த பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தோம். இதையடுத்து, கடந்தாண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2020-21ம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ், மேற்கண்ட சாலை அமைக்க  ரூ. 12.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர். ஆனால், சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, பணி நடந்து முடிந்தது போல் பலகை வைத்துள்ளனர். மேலும், கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் பிடிஓ அலுவலகத்தில் இருந்து  பணத்தை பெற்று கையாடல் செய்துள்ளனர். இதற்கு ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை