பணியின் போது உயிரிழந்த உளவுத்துறை இன்ஸ்பெக்டர் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

திருமங்கலம், ஏப்.12: திருச்சியில் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த உளவுத்துறை இன்ஸ்பெக்டரின் உடல் திருமங்கலம் அருகே சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூரை சேர்ந்தவர் சிவா. திருச்சியில் உளவுத்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது இன்ஸ்பெக்டர் சிவா மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த மேலஉரப்பனூருக்கு நேற்று மதியம் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டது.

உறவினர்கள், கிராமமக்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்ஸ்பெக்டரின் உடலுக்கு அஞ்சலி செய்தனர். தொடர்ந்து திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன், திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இன்ஸ்பெக்டரின் உடல் மேலஉரப்பனூர் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் சீனி தலைமையிலான போலீசார் தமிழக காவல்துறை சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செய்தனர். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் வழக்கப்படி இன்ஸ்பெக்டர் சிவாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திருச்சியில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி

மழைக்காலம் துவங்குவதற்கு முன் சாலைகள் புதிதாக அமைக்கப்படும்