பணம் வசூலிக்க சென்ற நிதிநிறுவன ஊழியருக்கு அடி,உதை பைக் தீ வைத்து எரிப்பு ஆரணி அருகே

ஆரணி, ஜூன் 6: ஆரணி அருகே பணம் வசூலிக்க சென்ற நிதிநிறுவன ஊழியரை தாக்கி பைக்கை தீ வைத்த எரித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சக்திவேல்(30). ஆரணியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கலெக்ஷன் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சக்திவேல் ஆரணி அடுத்த மட்டதாரி கிராமத்திற்கு மகளிர் சுயஉதவி குழுக்களிடம் பணம் வசூல் செய்தல் மற்றும் கடன் கொடுப்பது தொடர்பாக ஆரணியில் இருந்து தனது பைக்கில் சென்றார். தொடர்ந்து, மட்டதாரி பிள்ளையார் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த அதே கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மகன் அஜித்(28) என்பவர் திடீரென சக்திவேலின் பைக்கை மறித்து அசிங்கமாக திட்டி தகராறு செய்தாராம். தொடர்ந்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அஜித் திடீரென சக்திவேலுவை சரமாரியாக தாக்கியதுடன். சக்திவேலின் பைக்கை தீ வைத்து கொளுத்தி உள்ளார். தீ வேகமாக பரவி பைக் எரிந்து சேதம் அடைந்தது. மேலும், அஜித் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்திவேல் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, பைக்கை கொளுத்திவிட்டு தலைமறைவாக உள்ள அஜித்தை வலைவீசி வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி