பணம் நகைகளை அதிகம் வைத்திருக்க வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

பழநி, ஏப்.11: திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர் ரோந்துப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் கூறியுள்ளதாவது:
தனியாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், அருகில் இருக்கும் 5 வீட்டுக்காரர்களின் போன் நம்பர்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவரச அழைப்பு வந்தால் 5 நிமிடங்களுக்குள் வர முடிந்தவராக இருக்க வேண்டும். அவர்களிடம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் சொல்லி வைத்திருக்க வேண்டும். தனியாக உள்ள வீடுகளில் முதியவர்களை காவலுக்கு வைத்து விட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியில் செல்லக் கூடாது.

வெளியூர் செல்வதாக இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும். தனியாக உள்ள வீடுகளில் நாய் வளர்ப்பது நல்லது. இரவு நேரங்களில் அந்த நாயை கட்டிப் போட்டிருக்கக் கூடாது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் புதிய நபர்களை விசாரிக்க வேண்டும். அவர்களது பேச்சு மற்றும் நடத்தையில் சந்தேகம் இருந்தால் உடனடியாக பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தனியாக உள்ள வீடுகளில் அனைவரும் தற்காப்பிற்கு மிளகாய் பொடிகளை பயன்படுத்த ஏதுவான இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது ஆன்ட்ராய்டு செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தனியாக உள்ள வீடுகளில் அதிக பணம் மற்றும் நகைகளை வைத்திருக்காமல், வங்கிகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு