பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி குமரி காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கணவரை ஏமாற்றி ₹35 லட்சம் மோசடி: தனியார் நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்: பணம் இரட்டிப்பாக்கி தருவோம் என கூறி, குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை கைலாசவிளையை சேர்ந்தவர் சாம்ராஜ்.   எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஜெகதா கிறிஸ்டி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களின் உறவினர் பள்ளியாடியை சேர்ந்த சுஜான்சிங். இவர் மூலம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த மார்ட்டின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மார்ட்டின் கோவையை தலைமையிடமாக ெகாண்டு இயங்கி வரும் ஒரு நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாக உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் இதன் கிளைகள் உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதங்களில் முதலீடு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறி உள்ளனர். திடீரென ஒருநாள் கோவையில் இருந்து நிதி நிறுவன உரிமையாளர்கள் ரமேஷ், அவரது தாயார் லெட்சுமி ஆகியோர் வந்திருப்பதாக கூறி திக்கணங்கோட்டில் உள்ள மார்ட்டின் வீட்டுக்கு சாம்ராஜ், அவரது மனைவி ஜெகதா ஆகியோரை அழைத்து  சென்றனர். அப்போது ரூ.5 லட்சம் முதலீடு செய்யுமாறும், உரிய முறையில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர். இதையடுத்து மனைவியின் நகைகளை விற்று அதன் மூலம் ரூ.5 லட்சம், சாம்ராஜ் செலுத்தினார். அப்போது ஒரு ஒப்பந்த பத்திரமும் கொடுத்தனர். பின்னர்  போனஸ் என கூறி, ரூ.50 ஆயிரத்தை சாம்ராஜ் மனைவி ஜெகதாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பினர். இதை தொடர்ந்து நடைபெற்ற நிதி நிறுவன கூட்டத்துக்கு சாம்ராஜை அழைத்து சென்றனர். அப்போது திடீரென சிறப்பு திட்டத்தை நிறுவனம் அமல்படுத்துகிறது. இதன்படி மிக விரைவாக வட்டி தொகை கிடைக்கும். எனவே ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால், மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும். இந்த சிறப்பு திட்டம் குறுகிய கால திட்டம் என கூறினர். இதையடுத்து சாம்ராஜிக்கு ஆசை வாரத்தைகள் கூறி, சிறப்பு திட்டத்தின் சேருமாறு வலியுறுத்தினர். இதை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சம் வரை செலுத்தி சிறப்பு திட்டத்தில் சாம்ராஜ் சேர்ந்துள்ளார். ஆனால் பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் அவர்கள் கூறிய படி பணத்தை கொடுக்க வில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்டும் பலன் இல்லை. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சாம்ராஜ் புகார் செய்தார். பின்னர் பத்மநாபபுரம் நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி தற்போது குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். ரமேஷ், அவரது தாயார் லெட்சுமி மற்றும் மார்ட்டின், சுஜான்சிங் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மார்ட்டின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது