பட்டுக்கோட்டை தொகுதிக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

பட்டுக்கோட்டை, ஜூலை 9: பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. சட்டமன்றத்தில் நீர்வளத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட மானியக்கோரிக்கையின்போது, பட்டுகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அண்ணாதுரை தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாகுவதை தடுக்கவும் சுமார் 30 கோடி மதிப்பீட்டில் பட்டுக்கோட்டை தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கரம்பயம் கிராமத்தில் வேதபுரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, துவரமடை கிராமத்தில் நரியாற்றின் குறுக்கே ரூபாய் 5 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு, தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் பழைய பாட்டுவநாச்சி புலிக்குத்தி வாரி மிகை நீர் வழிந்தோடியினை மறுகட்டுமானம் செய்யும் பணி ரூபாய் 8 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டிலும், கண்ணனாறு வடிகாலின் பாதைகளை (கீழக்குறிச்சி பெரியகோட்டை மற்றும் புளியக்குடி) ஈப்பு பாதை சீரமைப்பு மற்றும் முகப்புகளை புனரமைக்கும் பணி மதிப்பீடு ரூபாய் 6 கோடியில் நடைபெற உள்ளது. எனது கோரிக்கையை ஏற்று வளர்ச்சிப் பணிகளை பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது, முசுகுந்தநாடு அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்கு முழுமையான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணிகளுக்கு உதவி செய்திருக்கிற இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கு நன்றி. அதேபோல் விக்ரமம் ஊராட்சியில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கித்தர வேண்டும். தம்பிக்கோட்டை பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி