பட்டாசு வெடிக்க வெறும் 8 பேர் வந்ததால் அப்செட் ஆன தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியிருக்காராமே பெண் சாமியார்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தற்போது மீடியாக்களில் பிரபலமாக உலா வரும் பெண் சாமியார் அன்னபூரணி தனது ஆசிரமத்தை சென்னையை ஒட்டிய பகுதியிலேயே அமைக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கான இடம் தேர்வு செய்ய பல ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அவரை அணுகி உள்ளனர். அடிக்கடி இடம் பார்க்க வேண்டி உள்ளதாலும், ஆசிரமத்தை ஒட்டி வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த பெண் சாமியார் அன்னபூரணி கேளம்பாக்கம் அருகே தையூரில் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளார். இதற்கான பத்திரப்பதிவு திருப்போரூர் சார்பதிவகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மூத்த தலைவர்களுக்கு காங். தலைமை ‘நோ’ சொல்லிவிட்டது என்கிறார்களே…’’‘‘புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக பெரும்பாலான நிர்வாகிகள் உள்ளனர். சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன்  எம்.எல்.ஏ. ஆகியோர் கண்டன உரையாற்றினர். அவர்கள் போராட்ட களத்தில் இருந்து சென்ற பின் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் தனியாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இருதரப்பினரையும் இணைக்க மூத்த நிர்வாகிகள் சிலர் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிட பார்வையாளரான தினேஷ் குண்டுராவ், புதுவை காங்கிரஸ் நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவரை புதிதாக நியமனம் செய்தால் பிரச்னை தீர்ந்துவிடும் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இதற்காக யாரை தேர்வு செய்வது என நிர்வாகிகளை  தனிதனியாக அழைத்து ராகுல்காந்தி பேசி வந்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைமை, இரண்டு கண்டிசன் போட்டுள்ளதாம். ஒன்று கட்சியில் நீண்ட காலமாக இருந்து  பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று இருக்க வேண்டும். மற்றொன்று  50 வயதுக்கு கீழே இருக்க வேண்டுமாம். இதனால் மூத்த தலைவர்களின் ஆசையில் இடி விழுந்ததாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பில் யாராவது ஒருவரை நியமனம் செய்வது போன்று இருந்தால் அவர்கள் மீதான குற்றப்பின்னணி விவரங்களை தலைமைக்கு அனுப்பி செக் வைக்கிறார்களாம். இதனால் காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில்  சிக்கல் நீடிக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பட்டாசு வெடிக்க எட்டு பேர் மட்டுமே வந்தாங்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.‘‘இடைக்கால பொதுச்செயலாளர் விவகாரம் குறித்த ஐகோர்ட் உத்தரவு, தேனிக்காரர் கோஷ்டியை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்காம். இந்த உத்தரவால் தனக்கான ஆதரவாளர் கூட்டம் அதிகரிக்கும் என்று அவர் ரொம்பவே எதிர்பார்த்தாராம். அதிலும் குறிப்பாக சேலத்துகாரரின் சொந்த ஊரில் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்பதை தேனியின் அடிப்பொடிகள் ஆராய்ந்து பார்த்தாங்களாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த ரியாக்‌ஷன் எதுவுமே இல்லையாம். கோர்ட் உத்தரவு வந்ததும், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்க, குறைந்தது 50 பேராவது வருவார்கள் என்று எதிர்பார்த்தாங்களாம். ஆனால் மொத்தமே 8 பேர் மட்டுமே  வந்து பட்டாசு வெடிச்சுட்டு, தேனிக்காரருக்கு ஆதரவாக கோஷம்  எழுப்பினாங்களாம். இவங்களும் சமீபத்தில் சென்னையில் தேனிக்காரர் நடத்திய கூட்டத்தில் முன்வரிசையில் அமர்ந்து இருந்தவங்களாம். இப்படி பட்டாசு போட வந்த 8பேரும், ‘‘நாங்க தாங்க உண்மையான இலைக்கட்சி. சேலத்துக்காரரு பணத்தை காட்டி எல்லாரையும் மயக்கி வச்சிருக்காரு. இன்னும் இரண்டொரு நாளில் இந்த மயக்கம் எல்லாம் தீரும். அப்புறம் பாருங்க. எல்லாரும் எங்க பக்கம் வருவாங்க,’’ என்று பட்டாசாக வெடிச்சாங்களாம்.‘‘நிதி கேட்ட புல்லட்சாமிக்கு அதிர்ச்சி கொடுத்தாராமே ஜி..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரி தேஜ கூட்டணி ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதலுக்கே புல்லட்சாமி படாத பாடுபட்டுவிட்டார். ஒருவழியாக எட்டு ஆண்டுக்கு பிறகு டெல்லிக்கு போய் மோடியை பார்த்து பட்ஜெட் ஒப்புதல் வாங்கினார். ரூ. 2 ஆயிரம் கோடி கூடுதலாக  கொடுத்தால்தான் என்னால் பட்ஜெட் போட முடியும். கையில் ஒத்த பைசா இல்லை ஜி என தன்னுடைய நிலைமையை சொல்லி, புதுச்சேரி மீது அனுதாபம் கொண்டு நிதி கொடுக்குமாறு கூறினார். வடிவேலு ஸ்டைலில் இது போதுமா, இதை வச்சு என்ன செய்யப்போற.. இன்னும் கேளு என்று கேட்டிருக்கிறார் நம்ம ஜி.. இவரும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு கொடுங்க, மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு நிதி கொடுங்க, சாலை அமைக்க நிதி என புல்லட்சாமி அடித்து விட்டிருக்கிறார். ஆனால் நம்ம ஜி சொன்னாராம், நம்ம ஆட்சிதான் நடக்குது, ஆனால் உங்க மாநிலத்துக்கு மட்டும் கூடுதலாக நிதி கொடுத்தால் மற்றவர்களும் கேட்பார்களே? அதனால் அண்ணனால இப்போ ஒன்னும் செய்ய முடியாது, கிளம்புங்க சாமி என கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த புல்லட்சாமி கையில் வைத்திருந்த எலுமிச்சை பழத்தையும், சாமி போட்டோவையும் கொடுத்துவிட்டு கிளம்பினாராம். வாசலுக்கு சென்றவரை அழைத்த ஜி.. பணமாத்தான் கொடுக்க மாட்டேன், திட்டமா கேளுங்க எவ்வளவு வேண்டுனாலும் ரிலீஸ் பண்ண சொல்றேன். குறிப்பா ஒன்றிய அரசு திட்டத்துக்கு ஒத்த பைசா மாநிலம் தர தேவையில்லை. நாங்களே கொடுக்கிறோம் என கூறியதில் ஆறுதல் அடைந்தாராம் புல்லட்சாமி’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இடைத்தேர்தலை புறக்கணித்து குற்றாலத்துக்கு கிளம்பிய குக்கர் பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா