பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தஞ்சாவூர், ஜூலை 29: அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சேது செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்சியும், நிறுவன தலைவருமான மாயவன் முன்னிலை வகித்தார். செயல் அறிக்கையை பொதுச் செயலாளர் ஜெயக்குமார், நிதிநிலை அறிக்கையை விஜயசாரதி ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்ட செயலாளர் ஏகநாதன் வரவேற்றார். மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 13 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் பள்ளி கல்வித்துறையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதற்கட்டமாக நடத்துவது, அண்ணா ஆட்சிகாலத்தில் உயர்கல்வி தகுதிக்கு இரண்டு இன்கிரிமெண்ட் ஊதியத்தை ஊக்க ஊதியமாக வழங்கியதை நிறுத்தியதை திரும்ப வழங்கிட வேண்டும், கலைஞர் முதல்வராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு வழங்கிய ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் உடனடியாக வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும். 220 வேலை நாட்கள் என்பதை பள்ளிகள் துறை திரும்ப பெற வேண்டும்.

2012 க்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது இயற்கை நியதிக்கு முரணானது என்ற அடிப்படையிலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இரண்டு வழக்குகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆசிரியருக்கு கற்பித்தல் பணியை தவிர மற்ற பணி வழங்குவதை உடனடியாக கைவிட வேண்டும்.

காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகியோரை விரைவில் நியமிக்க வேண்டும். அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. மாவட்டத் தலைவர் இதயராஜா நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

 

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து