பட்ஜெட்டில் 30% வரி விதிக்கப்பட்டதால் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு ‘ஓகே’ சொன்னதாக அர்த்தமில்லை: ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்

புதுடெல்லி: ‘பட்ஜெட்டில் 30 சதவீத வரி விதிக்கப்பட்டதன் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை’ என ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாவிட்டாலும், அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் பெரும் தொகையை முதலீடு செய்து வருகின்றனர். இதற்கிடையே, கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை ஒழுங்குபடுத்தி சட்டப்பூர்வமாக்குவதற்கான தனி மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கிரிப்டோ கரன்சி மூலம் ஈட்டும் வருவாய்க்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை ஒன்றிய அரசு சட்டப்பூர்வமாக்கியதா என்ற குழப்பம் ஏற்பட்டது.இதற்கு ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் மொஹபத்ரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: பட்ஜெட்டில் 30 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டதன் மூலம், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு வருமான வரித்துறை சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதாக அர்த்தமாகாது. வருமான வரித்துறையும், வருமான வரி சட்டமும், நீங்கள் செய்த பரிவர்த்தனைகள் வருமானத்தை ஈட்டுகிறா என்பதை மட்டுமே பார்க்கிறது. நாங்கள் எந்த வருமானத்திற்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடியாது. ஆனால், அந்த வருமானத்திற்கு வரியை மட்டும் விதிக்கிறோம்.எனவே, கிரிப்டோ வர்த்தகத்திற்கு நீங்கள் வரி செலுத்தியதால் அது சட்டப்படியானதாகவோ, வழக்கமானதாகவோ ஆகி விடாது. கிரிப்டோ கரன்சிக்கென தேசிய அளவில் ஒழுங்குமுறைக் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. தற்போது வருமான வரித்துறை கிரிப்டோ கரன்சி வர்க்கத்தில் நுழைந்துள்ளது. கிரிப்டோ கரன்சி சந்தையின் ஆழத்தை அளவிட, மதிப்பிடவே 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. டிஜிட்டல் வர்த்தகத்தில் ஒரு நிறுவனம் ஏதேனும் லாபம் அல்லது உபரி தொகையை வருமானத்தில் காட்டும் போது, ​​முதலீடு செய்ய பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதையும் அவர்கள் கூற வேண்டும், முதலீடு சரியாகவும் நியாயமாகவும் இருந்தால், உபரி வரி விதிக்கப்படும். அதுவே சட்டவிரோதமானதாக இருந்தால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.* ரூ.1 லட்சம் கோடி பரிவர்த்தனையா?நாட்டில் தற்போதைய கிரிப்டோ பொருளாதாரத்தின் மதிப்பீடுகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் எதுவும் அரசிடம் இல்லை என நேரடி வரிகள் வாரிய தலைவர் கூறி உள்ளனர். இதன் தகவல்களை திரட்டுவதற்கான பணிகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது. தோராயமான தரவுகளின்படி, நாடு முழுவதும் கிரிப்டோ கரன்சியில் 10 கோடி பேர் முதலீடு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 40 கிரிப்டோகரன்சிகள் இருப்பதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை ஒழுங்குபடுத்தப்படாத வர்த்தகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்