படூர் ஊராட்சியில் வளர்க்கப்பட்டுள்ள மூலிகை செடிகளை நேரில் பார்வையிட்ட பீகார் அமைச்சர்: மருத்துவ குணம் குறித்து கேட்டறிந்தார்

திருப்போரூர், அக்.15: படூர் ஊராட்சியில் வளர்க்கப்பட்டுள்ள மூலிகை செடிகளை பீகார் அமைச்சர் அமைச்சர் லெஷி சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அதன் மருத்துவ குணம் குறித்து அவர் கேட்டறிந்தார். சென்னையில் நடந்த திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சென்னை வந்துள்ள பீகார் மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லெஷி சிங் நேற்று மதியம் படூர் ஊராட்சிக்கு வருகை புரிந்தார். படூர் ஊராட்சியில் மாடி தோட்டம், இயற்கை மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் வளர்ப்பு, மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி, பசுமை படூர் என்ற திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. படூர் ஊராட்சி நிர்வாகம் செய்து வரும் செயலை சமூக வலைத்தளங்களில் பார்த்து வந்ததை தொடர்ந்து, சென்னை வந்த பீகார் மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லெஷி சிங், படூர் ஊராட்சிக்கு வருகை புரிந்தார்.

அப்போது அவருக்கு, ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து தலைவர் தாராசுதாகர் உற்சாக வரவேற்பு அளித்தார். அதனைத்தொடர்ந்து படூர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் இயற்கை மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை பார்வையிட்டு, அதன் மருத்துவ குணம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகரிடம் பீகார் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது இயற்கை முறையில் விளைக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட செடிகளை பீகார் அமைச்சருக்கு வழங்கி அவருடன் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் இணைந்து அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் செங்கைஆனந்தன், படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை