படகு இல்லம் செல்லும் நடைபாதை பழுது: சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம்

 

ஊட்டி, செப்.20: ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதை பழுதடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் சென்றாலும் ஒரு சில சுற்றுலா பயணிகள் நடந்தே சென்று சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, ஊட்டி படகு இல்லம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் வரை உள்ள ஒரு கிமீ தூரம் நடந்தே செல்கின்றனர்.

இதுபோன்று நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக சாலை ஓரத்தில் அலங்கார நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஒரு சில இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டு நடைபாதை பழுதடைந்துள்ளது. இதனால், இப்பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் உள்ளூர் மக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், படகு இல்லா நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இதனை சீரமைப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நடைபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை