பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

உடுமலை:  உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இதில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள் ஒருங்கே அமைந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மேற்பகுதியில் பஞ்சலிங்க அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் விரும்பி குளிப்பது வழக்கம். பருவ மழை காரணமாக அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அணையில் இருந்து உபரியாக வெளியேறும் மழை நீர் வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை அடிக்கடி சூழ்ந்து விடுவது வழக்கம். இதேபோல, நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வரத்து சற்றே குறைந்ததை எடுத்து சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பஞ்சலிங்க அருவியில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்தனர். இப்பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் பாலாற்றில் கால்களை நனைத்தபடி அமண லிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் முருகன் பிள்ளையார் கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி அமணலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளம் கட்டுக்குள் வந்த பின்பு பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்….

Related posts

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை: வீடியோ வைரலால் பரபரப்பு