Tuesday, July 2, 2024
Home » பஞ்சம் தீர்க்கும் ஓதனவனேஸ்வரர்

பஞ்சம் தீர்க்கும் ஓதனவனேஸ்வரர்

by kannappan

ஐப்பசி அன்னாபிஷேகம்: 31-10-2020    திருச்சோற்றுத்துறைசோற்றுத்துறை வயல்களின் சாய்ந்த செந்நெற்கதிர்களின் மீது சூரியன் தன் செங்கிரணங்களை வீச வயலே பொன் வேய்ந்த தகடாக ஜொலித்தது. செங்கதிர்களின் எதிரொலிப்பில் விழித்த மக்கள் வயற்காட்டை நோக்கி நடக்கலாயினர். ஆதவன் உச்சியை நெருங்கும்முன் பெரும் போராக கதிர்கள் அறுத்துக் குவித்தனர். அந்திச் சிவப்பு கீழ்வானத்தில் திரண்டு நகரும் வேளையில் குவித்த கதிர்களை தூற்றினர். நெல்மணிகளை ஒன்றாகக் குவித்தபோது அது மலையாகப் பெருகி ஆதவனையே மறைத்தது. அந்தி சரிந்து இருள் கவிழ மக்கள் குடில்கள் நோக்கித் திரும்பினர். அந்த அருளாளத் தம்பதியர் கோபுரமாகக் குவிந்திருந்த நெற்குவியலைப் பார்த்து அகமகிழ்ந்தனர். எண்ணாயிரம் அடியார்கள் வந்தாலும் கரையாது அமுது செய்யலாம் என்று மனதிற்குள் குதூகலித்தனர். சீரடியார்கள் அருளால் தம்பதியரின் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே சிவநாமச்சாரலில் ஓயாது நனைந்து, நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை அந்த திவ்ய பக்த தம்பதியர் தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்தனர். நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர். சீரடியார்களின் அடிபரவி தம் சிரசில் அவர்கள் திருவடி சூடி பேரானந்தம் பொங்க வாழ்ந்தனர். ஐயிரண்டு நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர். கயிலைநாதனைத் தவிர கிஞ்சித்தும் வேறெந்த எண்ணமும் இல்லாது இருந்தனர். ஈசன் இன்னும் அவ்விருவரின் மகோன்னதத்தை மூவுலகும் அறியும் வண்ணம் விளையாடத் தொடங்கினார்.அந்த ஆதவனை ஆதிசிவன் பார்க்க அவன் இன்னும் பிழம்பானான். தன் பிரகாசத்தை அப்பிரதேசம் முழுதும் பரப்பினான். அக்னியும் கைகோர்க்க, சூரியனும் சோற்றுத்துறையில் தீத்தாண்டவமாடினர். வருணன் வராது சோம்பிச் சிறுத்து மறைந்திருந்தான். ஆளுயர செந்நெற்கதிர்கள் கருகி அங்குலமாக குறுகி மக்கி மண்ணாகிப் போனது. பூமிப்பந்து பிளவுற்று நீரில்லா கருவேலக்காடாக மாறியது. அடியார்கள் சோழநாடே சோறுடைத்து என்பார்களே, வயல்வெளிகளெல்லாம் வாய்பிளந்து கிடக்கும் அவலமென்ன என கைதொழுது நின்றழுதனர். அருளாள தம்பதிகள் தவித்தனர். நெற்கிடங்கு வெறும் சிறு கூடையளவு குறுகியது கண்டு குற்றவுணர்வுற்றனர். தாங்கள் அன்னம் ஏற்காது இறையடியார்கள் இன்னமுது செய்ய வேண்டுமே என கவலையில் தோய்ந்தனர். காலம் அதிவேகமாகச் சுழன்றது. சமையல் கலன்கள் காலியாக மாறின. சோற்றுத்துறையே சோறுக்காக அலைந்தது. அருளாள தம்பதியர்கள் மெய்வருந்தி சோறுண்ணாது துறையுள் உறையும் ஈசனின் சந்நதியே கதி என்று கழித்தனர். சிவனடியார்களும் சூழ்ந்து நின்று அவர்களை ஆற்றுப்படுத்த, துக்கம் இன்னும் மடைஉடைந்த வெள்ளமாகப் பெருகியது. ராப்பகல் அறியாது கண்கள் மூடி தவமிருந்தனர். தீந்தவம் சுட்டெரிக்கும் சூரியனையே உரச, ஆதவன் ஓடி ஒளிந்தான். கயிலைநாதன் தம் அருட்கண்களை விரித்துப்பார்த்தான். குடம் குடமாக அரனின் அருளை கொட்டித் தீர்த்தான். அவ்விரு அடியார்கள் முன்பும் எடுக்க எடுக்க குறையாத அட்சயபாத்திரத்தை அவர்கள் முன் பரப்பினான், சோற்றுத்துறை சிவபெருமான். அன்னத்தை அட்சயபாத்திரம் சோவெனப் பொழிந்தது. ஓயாது ஓதனத்தை சுரந்தது. அக்காட்சியைக் கண்ட அருளாள தம்பதியர் ஓதனவனேசா… ஓதனவனேசா…என அவன் நாமத்தை சொல்லி ஆனந்தக் கூத்தாடினர். (ஓதனம் என்றால் அன்னம் என்பது பொருள்) மறைந்திருந்த வருணன் அதிவேகமாக வெளிப்பட்டான். அடைமழையால் ஆறுகளும். தாமரைத் தடாகங்களும் நிரம்பி வழிந்தன. இயற்கை பொய்த்தாலும் இணையிலா ஈசனின் தாள் பணிய அரனின் அருட்கை துணை நிற்கும் என திவ்யதம்பதியை முன்னிறுத்தி விளையாடினார். அன்றிலிருந்து அட்சய பாத்திரம் கடலாகப் பொங்கியது. அவ்வூரை நெருங்கியோரை வயிறு நிறையச் செய்தது. சோற்றுத்துறைக்கு சிகரம் வைத்தாற் போல இன்னொரு விஷயமும் நடந்தேறியது. எங்கேயோ தவத்தில் ஆழ்ந்திருந்த கௌதம மஹரிஷி சட்டென்று கண்கள் திறந்தார். தம் அகம் முழுவதும் சுயம்பு மூர்த்தியாக ஜொலித்த ஓதனவனேஸ்வரரைக் கண்டார். தாம் அங்கு அழைக்கப்படுவதை உணர்ந்தார். அடியார்களோடு சோற்றுத்துறையை வெகு சீக்கிரம் நெருங்கினார். கயிலைக்கு ஏவிய அருளாள தம்பதி அருவமாய் கௌதமர் வருகையை உணர்ந்து இன்னும் சிலிர்த்தனர். ஊரே திரண்டு நின்று கௌதமரை கைதொழுது வரவேற்றது. ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அன்னமிடுதலை விட வேறு தர்மம் உண்டோ என அதை வழிமொழிந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூற சோற்றுத்துறையே சிலிர்த்துக் குதூகலித்தது. ஈசன் இன்னும் ஒருபடி மேலேபோய் அவ்வூரையே சோற்றுக்கடலில் ஆழ்த்திவிடத் துணிந்தார். அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை மெல்ல தமது அருட்கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தது. நெல்மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பது பார்த்த அடியார்களும், பக்தர்களும் நமசிவாய…நமசிவாய…என விண்பிளக்க கோஷமிட்டனர். பச்சைவயலுக்கு பொன்காப்பிட்ட செந்நெற்கதிர்களுக்கு மத்தியில் வெண்முத்துக்கள் கோர்த்த மாலைபோல் அவ்விடம் ஒளிர்ந்தது. ஊரார் வயலில் இறங்கி கூடைக்குள் சூடாக அன்னப்பருப்பை நீவியெடுக்க அழகாக கூடையில் சென்று அமர்ந்தது. அன்னமலர்கள் மலையாகக் குவிந்தது. ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது.அதேநேரம், திருமழபாடியில் திருநந்திதேவரின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, தேவாதி தேவர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும், சாமான்ய மனிதர்களும் மழபாடியில் மையம் கொண்டனர். பூந்துருத்தியிலிருந்து மலர்கள் குவிய, வேதிக்குடியிலிருந்து வேதியர்கள் கூட்டம் கூட்டமாய் வர, சோற்றுத்துறையிலிருந்து அன்னம் குன்றுகளாக குவிக்கப்பட்டது. சோற்றுத்துறை நாதனின் அருள் மணம் அன்னத்தோடு இயைந்து குழைந்தது. அமுதமாக ருசித்தது. உண்டோர் பெரும்பேறுற்றனர். திருச்சோற்றுத்துறை சுடர்விட்டுப் பிரகாசித்தது.இத்தலத்தின்கண் இன்னும் எத்தனையோ விஷயங்கள் விரவிக்கிடக்கின்றன. நான்கு வேதமோதிய துர்பாக்கியன் என்பான் சூழ்நிலையால் பஞ்சமாபாதகங்கள் செய்தான். தன் வீட்டிலேயே திருடினான். மகனென்று அறியாத தந்தை திருடன் என அடித்துக் கொன்றான். இறந்தவன் பிரம்மராட்சனாக மாறி வருவோர் போவோரின் ரத்தம் குடித்து அடாது செய்தான். சுதர்மன் எனும் சிவனடியார் சோற்றுத்துறைக்கு வரும்போது குறுக்கே தோன்றி வழிமறித்தான். சுதர்மன் நீ யார் என்று கேட்டமாத்திரத்திலேயே வந்தவர் சிவனடியார் என்றறிந்தான். அவரின் தேஜஸிலேயே தம் பிரம்மராட்சஸ சொரூபம் களையப்பெற்றான். அத்தலத்திலே சூட்சும வடிவத்தில் திரிந்து ஓதனவனேஸ்வரரை வணங்கி திவ்யரூபம் பெற்று மேலுலகம் சென்றான். பஞ்சமாபாதகங்கள் புரிந்தவனும் தலத்தில் கால்வைக்க அவன் மனம் மாறும் என்பது உறுதி. சோழநாடு சோறுடைத்து என்பது இத்தலத்தை மையமாக கொண்டு சொல்லப்பட்டதுதான் எனில் மிகையில்லை. இத்தலம் சப்தஸ்தானத்தில் ஒன்றாகத் திகழ்கிறது. நந்தீசனின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து உணவு வகைகள் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தலநாயகரும் திருமழபாடிக்கு எழுந்தருள்வார். அதுபோல கௌதமமகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியாக விளைந்த அந்த இடம் இன்றும் சோறுடையான் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் அந்த வாய்க்காலில் ஒரு கதிர் மட்டும் அரிசியாகவே விளைந்துவருவதாகவும் கூறுகின்றனர். திருச்சோற்றுத்துறை எழில்சூழ் குடமுருட்டியில் நீர் சுழித்துக்கொண்டோட தென்றல் தோள் தொட்டுச் செல்லும் அழகிய கிராமம். நான்கு வீதிகளோடும், இரு பிராகாரங்களோடும் கிழக்குப்பார்த்த கோயில் இன்னும் எழிலாக்குகிறது. புராணப்பெருமையும், வரலாற்றுப் புகழும் கொண்ட திருச்சோற்றுத்துறைக் கோயில் இருதளக் கற்றளியாக சதுரவிமானமுடைய எடுப்பித்திருக்கிறார்கள். முதலாம் ஆதித்தசோழன் திருப்பணி புரிந்திருக்கிறான். ராஜராஜசோழனின் 15ம் ஆட்சியாண்டின் போது அளிக்கப்பட்ட நிவந்தங்களை கல்வெட்டுக்கள் அழகாகப் பகருகின்றன. மேலும் நுளம்பர்காலக் கலைப்பணியை  கண்ணுறும் போது இத்தலத்தின் முதுமைபிரமிப்பூட்டுகிறது.கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கருவறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதியினர் அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும்மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு அமுது செய்தீரா என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது. அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்றகோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழுகிறார் ஓதனவனேஸ்வர் எனும் தொலையாச் செல்வர். சமயக்குரவர் மூவர் பாடி பரவசித்திருந்த தலம் இது. தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாகப் பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்புலிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. சுயம்புப் பிழம்பின் ஈர்ப்பு காந்தமாக அருகே வருவோரை தமக்குள் ஏற்றுக்கொள்கிறது. சோறு என்பது உண்ணும் சோறு என்று பொதுப்பொருள் உண்டு. அதேநேரம் சோறு என்பது வெண்மை யின் அடையாளம். பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று என இருவேறு பொருளுண்டு. அடியார் மனதிற்கிணங்க பேரின்பத்தையும், உயிர்காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள் ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூ நெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பேசுகிறார். முக்திக்கு செல்ல ஓதனவனேஸ்வரனின் பெயர் போதுமே என எளிய பாதையை அழகு வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டுகிறார். சோற்றுத்துறைநாதர் சோர்வை நீக்கி புத்தொளி பரப்புவதில் சமர்த்தர். தொலையாச் செல்வரின் அருகே செல்லச் செல்ல நம் துன்பங்கள் வெகு தொலைவில் சென்று மறையும். வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன். சந்நதியின் வலிமையில் சிக்குண்டு மனமிழந்து பிராகாரத்திற்கு நகர்கிறோம்.நேர்த்தியான வடிவமைப்போடு திகழும் அழகுப் பிராகாரம். கருவறைக் கோஷ்டங்களில் தென்முகக் கடவுள் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து அமைதி தவழும் முகத்தோடு அருள்பாலிக்கிறார். திருமால் நின்று வழிபட்டதால் பிராகாரத்தே நாராயணப் பெருமாள் விளங்குகிறார்.  அதேபோல உட்பிராகாரத்தில் அழகிய ஐயனார் சிலையும், தனிக்கோயில் மகாலட்சுமியும், பஞ்சபூதலிங்கங்கள் என அழகே அணிவகுத்து நிற்கின்றனர். கோயிலின் வெளிப்பிராகாரத்தே அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். எழில்கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவள் அன்னபூரணியெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள் குளிர் பார்வையால் மனதை நிறைக்கிறாள். கண்கள்மூடி கரம் குவிக்க வாஞ்சையோடு பார்க்கும் நாயகி. அன்னபூரணி அன்னம் மட்டுமல்லாது வாழ்வின் அனைத்தையும் அளிக்கும் பூரணசொரூபி. பசிப்பிணி தாண்டி பிறவிப்பிணியை அறுப்பவள் இவளே. கோயில் முழுதும் கல்வெட்டுக்களாலும், கவின்மிகு சிற்பங்களாலும் நிறைந்து கிடக்கிறது. இத்தலத்தின் விருட்சம் வில்வம். திருச்சோற்றுத்துறை செல்லுங்கள். பிறைசூடிய பிரானின் திருவடி பரவிடுங்கள். வற்றாத வளங்கள்சேர்த்திடுங்கள். இத்தலம் தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகேயே உள்ளது.கிருஷ்ணா…

You may also like

Leave a Comment

nine − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi