பச்சை குத்தியவருக்கு ராணுவத்தில் சேர வாய்ப்பு: 2 வாரத்தில் அகற்ற கெடு விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வலது கையில் பச்சை குத்தி இருந்ததால் ராணுவத்தில் சேர்க்க மறுக்கப்பட்ட வாலிபருக்கு, அந்த பச்சையை 2 வாரத்தில் அகற்றி விட்டு மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணுவப் பிரிவில் கான்ஸ்டபிளாக சேர சென்ற இளைஞர் ஒருவர், தனது வலது கையில் மதம் தொடர்பான பச்சையை குத்தி இருந்ததால் தகுதி இழப்பு செய்யப்பட்டார். கடந்த செப்டம்பரில் நடந்த மருத்துவ பரிசோதனையின் போது அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `பச்சை குத்தியதை அகற்ற லேசர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். அதை தவிர உடல் தகுதியில் எந்த குறைபாடும் கிடையாது. எனவே, என்னை ராணுவத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார்.ராணுவம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சல்யூட் அடிக்கும் வலது கையில் பச்சை குத்தியிருப்பதால், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, அவரை துணை ராணுவத்தின் ஒன்றிய ஆயுத போலீஸ் படை, என்ஐஏ உள்ளிட்ட எந்த பிரிவிலும் சேர்க்க முடியாது,’ என்று விளக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள் சுரேஷ் கெய்ட், சவுரப் பானர்ஜி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘கையில் குத்தியுள்ள பச்சையை அகற்றி விட்டு 2 வாரங்களுக்குள் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும்,’ என்று வாலிபருக்கு உத்தரவிட்டு, அவருடைய வழக்கை முடித்து வைத்தது….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து