பசுவந்தனையில் லாரி மோதி மின்மாற்றி சரிந்து விழுந்து சேதம்: 8 கிராமங்களுக்கு 2 மணி நேரம் மின் விநியோகம் துண்டிப்பு

ஓட்டப்பிடாரம், ஜூலை 5: தூத்துக்குடியில் இருந்து கயத்தார் பகுதியில் உள்ள குவாரியில் கல் ஏற்றுவதற்காக, நேற்று முன்தினம் லாரி சென்று கொண்டிருந்தது. தெற்காத்தூரை அடுத்த கொழுவைநல்லூரை சேர்ந்த முத்துக்குமார் (55) என்பவர் லாரியை ஓட்டினார். பசுவந்தனை, எப்போதும்வென்றான் சாலையில் இரவு 10.30 மணியளவில் வரும்போது சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதில் மின்கம்பங்கள் முறிந்து மின்மாற்றியும் தரையில் விழுந்து சேதமானது.

சம்பவத்தின்போது உயரழுத்த மின்கம்பிகளில் உராய்வு ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்த பசுவந்தனை போலீசார், துணை மின் நிலையத்தை தொடர்பு கொண்டு உயரழுத்த மின் விநியோகத்தை துண்டிக்கச் செய்தனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து லாரி மோதி சேதமான மின்மாற்றிக்கு வரும் உயரழுத்த மின்கம்பிகளை அதற்கடுத்த மின் கம்பத்தின் கட் பாயின்டில் இருந்து துண்டித்தனர். அதன் பிறகே பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார 8 கிராம பகுதிகளுக்கு மின் விநியோகம் சீரானது.

இந்த விபத்தால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இன்றி கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மின்வாரிய அதிகாரிகளின் புகாரின் பேரில், லாரி டிரைவர் முத்துக்குமாரிடம் பசுவந்தனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை