Saturday, July 6, 2024
Home » பசி பட்டினியிலும் காதலால் இணைந்திருந்தோம்!

பசி பட்டினியிலும் காதலால் இணைந்திருந்தோம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி அக்கா கடை ‘‘பசின்னு யார் வந்தாலும் சாப்பாடு கொடுத்திடுங்க. பசியின் வலி எப்படி இருக்கும்னு  நான் உணர்ந்திருக்கேன். என் குழந்தைக்கு ஒரு ஆப்பிள் கூட வாங்கித்தர முடியாம நான் தவிச்சிருக்கேன்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த வனிதா. இவர் வேளச்சேரியில் தள்ளுவண்டி கடை ஒன்றை தன் கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார். ‘‘நான் பிறந்தது பட்டுக்கோட்டை பக்கத்தில் உள்ள பூவளூர் என்ற சின்ன கிராமம். பட்டுக்கோட்டை மகளிர் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். அதன் பிறகு  டுடோரியலில் சேர்ந்து படிச்சேன். இந்த சமயத்தில்தான் எனக்கும் என் கணவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர் தூரத்து உறவுதான். பக்கத்து வீடு. அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என்னை அவ்வளவு நல்லா பார்த்துப்பாங்க. அந்த அன்பு தான் என்னை அவர் மேல் காதல் வயப்பட வச்சது. எங்க இரண்டு பேர் வீட்டுலேயும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.லவ்ன்னு தெரிஞ்சா அவ்வளவு தான். அதுவும் கிராமத்தில் சொல்லவே வேணாம். உடனே பஞ்சாயத்தை கூட்டிடுவாங்க. நான் வீட்டில் ஒரே பொண்ணு. இரண்டு தம்பிங்களும் சின்ன பசங்க. அந்த வயசில் எனக்கு இவரைத்தாண்டி வேற எதுவுமே தெரியல. டுடோரியலில் படிப்பு முடிச்சிட்டு பட்டுக்ேகாட்டையில் ஒரு மருத்துவமனைக்கு நர்ஸ் வேலைக்காக போனேன் அங்க மூணு வருஷம் வேலை பார்த்தேன். அந்த சமயத்தில் இவர் சிதம்பரத்தில் படிச்சிட்டு இருந்தார். நான் வேலைப் பார்த்த மருத்துவமனையின் டாக்டரின் மகளும் சிதம்பரத்தில்தான் படிச்சிட்டு இருந்தாங்க. அவங்கள பார்க்க டாக்டர் அம்மா போவாங்க. கூடவே என்னையும் கூட்டிக் கொண்டு போவாங்க. சிதம்பரத்தில் நானும் இவரும் சந்தித்துக் கொள்வோம். இதற்கிடையில் அவரும் படிப்பை முடிச்சார். அவருக்கும் வீட்டில் வரன் பார்க்க  ஆரம்பிச்சாங்க. அதே போல எங்க வீட்டிலும் எனக்கு திருமண பேச்சை எடுத்தாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. அவரும் வீட்டில் தெரிஞ்சா பிரிச்சிடுவாங்கன்னு பயந்தார். என்னாலயும் அவரைப் பிரிந்து இருக்கமுடியாது என்ற நிலை. அப்பதான் நான் டாக்டர் அம்மா சென்னைக்கு வேலைக்காக அழைத்து போவதாக எங்க வீட்டில் சொல்லி சென்னைக்கு வந்துட்டேன். அவரும் வேலை விஷயமா போறதா ெசால்லி வந்துட்டார். இங்க அவரின் நண்பர் உதவி செய்ய இருவரும் கல்யாணம் செய்துக்கிட்ேடாம். பிறகு தனியா வீடு பார்த்து குடிபோனோம். பாப்பாவும் பிறந்துட்டாங்க. அந்த சமயம் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அவருக்கும் சரியான வேலை கிடைக்கல. இன்டர்வியூக்கு எல்லாம் போவார். ஆனால் வேலை கிடைக்கலன்னு திரும்பி வந்திடுவார். அந்த சமயத்தில் தான் அவரின் மாமா சிவில் சம்பந்தமான வேலையில் இருந்தார். அவருடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். ஓரளவுக்கு மூச்சு விடமுடியும்ன்னு நினைச்சிட்டு இருந்த நேரத்தில், அவரின் மாமாவிற்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்தது. அவரும் போயிட்டார். இவருக்கும் வேலை இல்லாமல் போயிடுச்சு. தான் படிச்ச படிப்பை மறந்துட்டு குடும்பத்தை காப்பாத்தணும்னு ெபயின்டிங், கேட்டரிங் வேலைக்கு எல்லாம் போனார். ரொம்பவே கஷ்டப்பட்டோம். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்தது. நானும் வீட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். மாதம் 2500 சம்பளம் கிடைக்கும். அதை வச்சு வீட்டு வாடகை, பசங்களுக்கு சாப்பாடு எல்லாம் பார்த்துக்கணும். பாப்பா பிரசவத்துக்காக போகும் போது எங்க கையில் ரூ.250 மட்டும் தான் இருந்தது. எங்க நிலமையை புரிந்து கொண்டு என் பக்கத்து வீட்டில் இருந்த பாட்டி, பாயம்மா மற்றும் பச்சையம்மான்னு அக்கா தான் உதவி செய்தாங்க. அவங்ககிட்ட இருந்த பழைய துணி எல்லாம் கொடுத்தாங்க. சொல்லப்போனா யாரும் இல்லைன்னு இவங்க தான் எனக்கு சீமந்தமே செய்தாங்க. நான் மருத்துவமனையில் இருந்த போதும் வீட்டுக்கு வந்த பிறகு இவங்க மூணு பேரும் அவங்க வீட்டு பொண்ணு போல பார்த்துக்கிட்டாங்க. பாப்பாவும் வளர்ந்தா. ஆனால் வீட்டின் நிலை ரொம்பவே மோசமாயிடுச்சு. கடன் வாங்கிக் கொடுத்து இன்டர்வியூக்கு அனுப்புவேன். வேலை கிடைக்கலைன்னு வருவார். இரண்டு பேர் வீட்டிலும் நல்ல வசதி. நாங்க இங்க வந்த பிறகு எங்க இரண்டு பேர் வீட்டிலேயும் பேசுறதே இல்லை. ஒரே பயம் எங்கள பிரிச்சிடுவாங்கன்னு. இப்படியே மூணு வருஷம் கிடைக்கிற வேலையை வச்சுக்கிட்டு தான் குடும்பத்தை நகர்த்தினோம். சில சமயம் ஒரு வேளை சாப்பாடு கூட இருக்காது. நாங்க கூட தாங்கிக்குவோம். சின்ன ெபாண்ணு அவளும் அந்த கஷ்டத்தை எங்களோடு அனுபவிச்சா. ஒரு சமயம் பால் இருந்தது, சர்க்கரை இல்ல. அதுகூட என்னால குழந்தைக்கு வாங்கி தர முடியலன்னு ெராம்பவே நொடிஞ்சி போயிட்டேன். இந்த நிலையில் தான் ஊரில் அப்பாவுக்கு உடல் நிலை ரொம்பவே மோசமா இருக்குன்னு தகவல் வந்தது. எனக்கு அப்பான்னா ரொம்பவே பிடிக்கும். அவருக்கு நான் இங்க இப்படி கஷ்டப்படுறேன்னு ெதரிஞ்சா ரொம்பவே வேதனை அடைவார்னு தான் நான் என்னோட நிலைமைய சொல்லவே இல்லை. ஆனா, அவருக்கு இப்படியாகும்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. அவரைப் பார்க்கத்தான் ஊருக்கு போனேன். அங்க போனதும் அப்பா… உன்னோட விருப்பத்த சொல்லி இருந்தா, நானே கல்யாணம் செய்து வச்சிருப்பேனேன்னு சொன்னார். ஆனா என் கணவரின் வீட்டில் அப்படியே நேரெதிரா பேசினாங்க. என்னையும் என் குழந்தையையும் விட்டுட்டு இவரை வரச்சொன்னாங்க. இவர் எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு உறுதியா சொல்லிட்டார். அதனால இன்று வரை என் மாமியார் வீட்டில் பேசவே மாட்டாங்க. அப்பாவை நான் போய் பார்த்து வந்த சில நாட்களிலேயே அவர் இறந்துட்டார். அதன் பிறகு அம்மாவும் தம்பியும் இங்க சென்னைக்கே வந்துட்டாங்க. இங்க வந்த பிறகு தான் அவங்களுக்கு நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரிந்தது. இதற்கிடையில் எங்களுக்கு மகனும் பிறந்தான். இப்ப இரண்டு பசங்க ஆயிட்டாங்க. எப்படி சமாளிக்கிறதுன்னு நான் ரொம்பவே குழம்பி இருந்த போது தான் என் தம்பிங்க என்னை சாப்பாட்டு கடை போட சொன்னாங்க’’ என்றவர் அதன் பிறகு தான் கடந்து வந்த பாதையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.‘‘என்னதான் அவர் கிடைக்கிற வேலைக்கு போனாலும், அதில் வரும் வருமானத்தை நம்பி மட்டுமே இருக்க முடியாது. அதைக் கொண்டு இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்கணும். நிறைய இருக்கு. நீ நல்லா சமைப்ப. அதனால உனக்கு தெரிஞ்சதைக் கொண்டு சாப்பாட்டு கடை போடுன்னு சொன்னான். அதற்கும் என்னால முதல் போட முடியாத நிலை. அவன் தான் சாப்பாட்டு கடைக்கு தேவையான பொருட்கள் முதல் வண்டி எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தான். நானும் தைரியமா செய்யலாம்னு செய்ய ஆரம்பிச்சேன். முதல் நாள் இட்லி ேதாசை சாம்பார் சட்னி மட்டும் தான் போட்ேடன். நான் எதிர்பார்க்கவே இல்லை முதல் நாளே 1000 ரூபாய்க்கு எனக்கு விற்பனையாச்சு. சாப்பிட வந்தவங்க எல்லாரும் அங்க ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பசங்க மற்றும் ஊரில் இருந்து இங்க வந்து தங்கி வேலை பார்க்கிறவங்க தான். அவங்க சாப்பிட்டு வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்குன்னு சொன்னாங்க. அதன் பிறகு அவங்க ஒன்னு ஒன்னா கேட்க ஆரம்பிச்சாங்க. நானும் ஒவ்வொரு உணவா அதிகரிச்சேன். இப்ப பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், தேங்காய்ப்பால், சிக்கன் குருமா, ெவஜ் குருமா, மீன் குழம்பு, தக்காளி சட்னி, புதினா சட்னின்னு எல்லாம் கொடுக்கிறேன். கடை ஆரம்பிச்சு இப்ப ஐந்து வருஷமாச்சு. இந்த கொரோனா போது கடை போடக்கூடாதுன்னு சொன்னதால, நாங்க எல்லாரும் ஊருக்கு போயிட்ேடாம். இப்பதான் மறுபடியும் கடைய போட ஆரம்பிச்சு இருக்கேன்.பசியால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால கடைக்கு முன்னாடி பசியோட வர்றவங்களுக்கு எதுவுமே கேட்காம சாப்பாடு கொடுத்திடுவேன். சிலருக்கு கேட்கவும் தயக்கமா இருக்கும். கடை முன்னாடி மிரண்டு போய் பார்ப்பாங்க. இட்லி எவ்வளவு அக்கான்னு கேட்பாங்க. அப்பவே புரிஞ்சிடும். கையில் காசு இல்லைன்னு. உடனே தட்டு நிறைய இட்லி வச்சு சாப்பிட குடுத்திடுவேன். எனக்கு பணம் எல்லாம் பெரிசா சம்பாதிக்கணும்ன்னு எண்ணம் இல்லை. நாங்க வாழுற அளவுக்கு சம்பாத்தியம் கிடைச்சா போதும். அதே சமயம் பசின்னு வந்தா, அவங்க யாருன்னு பார்க்காம சாப்பாடு ெகாடுக்கணும் அவ்வளவுதான். இப்ப வரைக்கும் என் மாமியார் வீட்டில் எங்கள ஏத்துக்கல. நல்லா படிச்சிட்டு ரோட்டு கடையில அவ கூட நிக்கிறன்னு அவங்க வீட்டில் இன்னும் பேசுவாங்க. இவர் அந்த தொழில்தான் எங்களுக்கு சாப்பாடு போடுது… செய்யும் தொழில்தான் தெய்வம்னு சொல்லிட்டு வந்திடுவார். இப்பகூட ஊருக்கு போனா அம்மா வீட்டில்தான் தங்குவேன். என் பசங்கள நல்லா படிக்க வைக்கணும்… அவங்களுக்கு என்னால முடிஞ்ச நல்லது செய்யணும்… பசின்னு வந்தா சாப்பாடு  கொடுக்கணும்… அவ்வளவுதான்’’ என்றார் புன்னகை மாறாமல் வனிதா அக்கா.செய்தி: ப்ரியாபடங்கள்: கிருஷ்ணமூர்த்தி

You may also like

Leave a Comment

two − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi