பங்குனி திருவிழாவை முன்னிட்டு மருந்தீசுவரர் கோயிலில் தேர் திருவிழா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, தினசரி சிறப்பு பூஜைகளுடன் சுவாமி ஊர்வலமும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் நான்கு மாடவீதிகளில் தேர் வலம் வந்தது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேரில் அம்பாளுடன் வீற்றிருந்த சந்தரேசேகர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், தேர் கோயில் நிலையை வந்தடைந்தது. தேர் திருவிழாவை ஒட்டி, சாலைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு  நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை 9 மணி அளவில் சந்திரசேகர சுவாமி நான்கு மறைகளுக்கு அருளல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழாவும், தியாகராஜ வீதியுலாவும் நடைபெறும். நாளை பிற்பகல் 3 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி அருளல் நிகழ்ச்சியும், தியாகராஜர் வீதியுலாவும், 18ம் தேதி காலை 7 மணிக்கு சந்திரசேகரர் கடல் நீராடல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு, திரிபுர சுந்தரி, தியாகராஜ சுவாமி திருமண விழாவும், இரவு 10.30 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறும். 19ம் தேதி மாலை 6 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடைபெறும். பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினசரி பரத நாட்டியம், பக்தி பாடல்கள், ஆன்மிக சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை, உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் அருட்செல்வன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்….

Related posts

உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் தாம்பரம் ரயில் நிலைய வளாகம் ₹1000 ேகாடியில் மறுசீரமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

மெட்ரோ ரயில் பணி காரணமாக 2 நாட்கள் மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு