பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பிராணநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருவிடைமருதூர், ஏப்.4: திருவிடைமருதூர் வட்டம் திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கட்டு தேரோட்டம் நடைபெற்றது. திருமங்கலக்குடி மங்களநாயகி சமேத பிராணநாத சுவாமி கோயில் பங்குனி உத்திரப் திருவிழா விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் மார்ச் 25ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து மறுநாள் (26ம் தேதி) சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து கோயில் கொடிமரத்தில் ரிஷப கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக (30ம் தேதி) சகோபுர காட்சியும், ஏப்ரல் 1ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடந்தது.

இதை தொடர்ந்து நேற்று (3ம் தேதி) தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் நிலையான தேர் இல்லை. எனவே கட்டுத்தேராக அமைக்கப்பட்டு அலங்காரம் செய்திருந்தனர். காலை 11 மணிக்கு தேரில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் அஸ்திரதேவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில் சன்னதி தெரு மற்றும் நாலு வீதிகளில் அழகுற ஆடி அசைந்து சென்றது. ஒவ்வொரு வீட்டிலும் தேரை நிறுத்தி தீபாராதனை செய்தனர். விழாவின் சிறப்பும்சமாக இன்று (4ம் தேதி) காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி பங்குனி உத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு