பங்குசந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவை நபரிடம் ரூ.39.02 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, ஆக. 2: பங்குசந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவை நபரிடம் ரூ.39.02 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த சபரி கிரிஜா என்பவரை மர்ம நபர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதைநம்பி சபரி கிரிஜாவும் மர்ம நபர் அனுப்பிய இணையதளத்தில் ரூ.39.20 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார்.

இதேபோல் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் ரூ.90 ஆயிரம், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த குபேரன் என்பவர் ரூ.1.96 லட்சம், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் ரூ.46 ஆயிரம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த சாம்வேல் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார்.

அப்போது தங்களது கிரெடிட் கார்டு லிமிட்டை உயர்த்துவதாக கூறி, விவரங்கள் கேட்டுள்ளார். இதைநம்பி சாம்வேல் விவரங்கள் வழங்கிய சிறிது நேரத்தில் அவரது கார்டிலிருந்து ரூ.28 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. மேலும் உப்பளம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு பிரீ பையர் கேம் ஐடி விற்பனைக்கு உள்ளதாக கூறியுள்ளார்.

இதைநம்பி சங்கர் ரூ.26 ஆயிரம் அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய 6 பேர் மொத்தமாக ரூ.43.06 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது