பக்கிங்காம் கால்வாய் வெள்ளநீர் புகுந்து உற்பத்தி பாதிப்பு

மரக்காணம், ஆக. 13: மரக்காணம் பகுதி உப்பளங்களில் பக்கிங்காம் கால்வாய் நீர் புகுந்ததால் உப்பு உற்பத்தி தடைபட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இதிலிருந்து ஆண்டுதோறும் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து தமிழகப்பகுதி மட்டுமல்லாமல் புதுவை, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த தொழிலில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபர் மாதம் வரையில் நடைபெறும். சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பக்கிங்காம் கால்வாயில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகிலுள்ள உப்பளங்கள் முழுவதும் வெள்ளநீரில் மூழ்கி கடல் போல் காணப்படுகிறது. இதனால் உப்பளங்களின் கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்புகளும் நீரில் கரைந்து வீணானது. இதையடுத்து மேடான பகுதியில் உப்புக்களை அம்பாரமாக கொட்டி தார்பாய் போட்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். உப்பளங்கள் நீரில் மூழ்கி விட்டதால் இந்த தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுபோல் கோடைக்காலம் முதல் தற்போது வரை இப்பகுதியில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டு, இந்த ஆண்டு உப்பு உற்பத்தியாளர்கள் அனைவரும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இப்பகுதியில் மழைநீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் துவங்கும் எனவும், உப்பு உற்பத்தி தடைபட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டு உப்பின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி