நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைக்கு நடவடிக்கை

கிருஷ்ணகிரி, நவ.29: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக்குழு ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத்தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் தலைமையில், கலெக்டர் சரயு முன்னிலையில், குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, சேலம்(மேற்கு) அருள், அண்ணா நகர் மோகன், நாமக்கல் ராமலிங்கம், ஆம்பூர் வில்வநாதன், ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் கருணாநிதி, துணை செயலாளர் ரவி ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் மூலம், கிருஷ்ணகிரி நகராட்சியில் ₹37.32 கோடி மதிப்பில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில், ₹233 கோடியே 34 லட்சம் மதிப்பில் எண்ணேகொள் அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுறத்திலிருந்து, புதிய வழங்குக் கால்வாய் அமைத்து, தென்பெண்ணையாற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்கும் இந்த திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், சி.டி. ஸ்கேன் மையம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, சூளகிரி ஒன்றியம் சென்னப்பள்ளியில், தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் மூலம் 10 ஏக்கர் பரப்பில், ₹2682 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஓசூர் மோரனப்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ஓசூர் மாநகராட்சி பேருந்து நிலையம் மற்றும் பொது கழிப்பறைகளை பார்வையிட்டு, பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், அங்குள்ள டைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாநராட்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

சூளகிரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாணவர்களின் வருகைப் பதிவேடு, அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான மதிய உணவு சமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர், சூளகிரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாணவர்களின் வருகை பதிவேடு, அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், கலெக்டர் சரயு முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சியில், எஸ்பி சரோஜ்குமார் தாகூர், டிஆர்ஓ சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) புஷ்பா, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாநராடசி துணை மேயர் ஆனந்தய்யா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) டாக்டர். சந்திரசேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை