நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து 600 கன அடியாக குறைந்தது

 

கோவை, நவ. 25: கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பெரியாறு, சின்னாறு, தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி ஆகிய ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உக்குளம், புதுக்குளம், கோளாரம்பதி குளம், நரசாம்பதி குளம் உள்ளிட்ட குளங்கள் முழுவதுமாக நிரம்பியது.

தற்போது, மழை குறைந்து உள்ளதால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து நேற்று குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, நேற்று முன்தினம் வினாடிக்கு 3,200 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்த ஆற்றில், நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 600 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது, குறிச்சி குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பேரூர் குளம் 25 சதவீதமும், குறிச்சி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் ஆகியவை 80 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளது.

இன்னும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தண்ணீர் வந்தால் மட்டுமே குளங்கள் அனைத்தும் நிரம்பும் நிலை உள்ளது. ஒரே ஒரு நாள் பெய்த மழையினால் மட்டுமே தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாகவும், அதுவும் குறைந்துள்ளதால் குளங்களுக்கு செல்லும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை