நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள், அதிகாரிகள் உதவியுடன் பல கோடி முறைகேடு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் ஆண்டுதோறும் நெல் அறுவடை பருவங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட் விலையைவிட, அதிகபட்சம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ300 முதல் ரூ400 வரை இங்கு கூடுதல் விலை கிடைக்கிறது. அதோடு, கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை, உடனுக்குடன் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்புகின்றனர். ஆனால், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை தவிர்த்து, இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் நடப்பதும், அதற்கு அதிகாரிகள் துணையாக இருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ8.57 கோடி வரை முறைகேடு நடந்தது தெரிந்தது. எனவே, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேரையும், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதில் இடைத்தரகரான சக்திவேல் மட்டும் ஆந்திராவில் இருந்து நெல்மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து கூடுதல் விலை வைத்து ரூ57.82 லட்சத்துக்கு நெல் விற்றிருப்பது தெரியவந்துள்ளது.கைதான சக்திவேல் சிபிசிஐடி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆந்திராவிலும், தமிழக விவசாயிகளிடமும் குறைந்த விலைக்கு நெல் வாங்கி, அதனை அதிகாரிகள் உதவியுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றதாக தெரிவித்துள்ளார். அதோடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்பட்ட 20க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதிகபட்சமாக, போளூர் மற்றும் செய்யாறு தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் தெரிவித்திருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இந்த முறைகேடுக்கு அதிமுக நிர்வாகிகள் சிலரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு