நெல்லை மாவட்டத்தில் 1185 பள்ளிகளில் 65 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் திட்டம்

நெல்லை, ஜூலை 30: நெல்லை மாவட்டத்தில் 1185 பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் 65 ஆயிரம் பேருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இலவச சீருடைகள் வழங்கும் திட்டத்தை பாளை. குறிச்சி பள்ளியில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல்வஹாப் எம்எல்ஏ துவக்கிவைத்தனர்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பாளையங்கோட்டை குறிச்சி மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இணை சீருடைகள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வஹாப் துவக்கிவைத்து மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில் ‘‘தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-5ம் கல்வியாண்டில்,

அரசு மற்றும் அரசு உதவி பெறம் பள்ளிகளில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரில் சென்று அளவெடுத்து முதல் இணை சீருடைகள் தைத்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம் குறிச்சி மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பயிலும் 64 மாணவ, மாணவிகளுக்கு இணை சீருடைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 1185 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 65 ஆயிரத்து 53 மாணவ, மாணவிகளுக்கு இம்முறை அளவெடுத்து தைக்கப்பட்ட சீருடைகள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ராஜபிரியா, நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) அழகுராஜன், மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, பாளை. வட்டார கல்வி அலுவலர் ரத்தினம், மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், கவுன்சிலர்கள் அமுதா சுந்தர், கந்தன், ஷபி அமீர்பாத்து, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் அபிநய சுந்தரம், தொழிற்கூட்டுறவு அலுவலர் (மேற்பார்வை) துரைசிங், மேற்பார்வையாளர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி