நெல்லை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் தக்காளி கிலோ ரூ.98க்கு விற்பனை

 

கேடிசி நகர், ஜூலை 10: தமிழ்நாட்டில் தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனர். இதையடுத்து தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லையில் ேதாட்டக்கலை துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாளை மகாராஜநகர், மேலப்பாளையம், கண்டியப்பேரி, என்ஜிஓ-ஏ காலனி மற்றும் அம்பை ஆகிய 5 இடங்களில் உள்ள உழவர்சந்தைகள் மூலம் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுவதால் உழவர் சந்தைகளில் தோட்டக்கலை துறை மூலம் விற்பனை செய்யப்படும் தக்காளியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, தக்காளியை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவுப்படி உழவர் சந்தைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.98க்கு விற்கப்படுகிறது. இதில் மகாராஜாநகர் உழவர்சந்தையில் 2800 கிலோவும், மேலப்பாளையத்தில் 1200 கிலோவும், மீதமுள்ள 3 உழவர் சந்தைகளில் தலா 500 கிலோ தக்காளியும் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறோம். நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 200 ஹெக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிது. தற்போது விலையேற்றத்தை கட்டுப்படுத்திட தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்