நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய விலை இல்லாததால் சாம்பார்வெள்ளரி, வெண்டை, சீனி அவரை வயல்களிலேயே வீணாகும் அவலம்: விவசாயிகள் வேதனை

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்  போதிய விலை கிடைக்காததால் சாம்பார்வெள்ளரி, வெண்டை, சீனி அவரை உள்ளிட்டவை வயல்களிலேயே வீணாகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வயல்களில் சாம்பார்வெள்ளரி, வெண்டை, சீனி அவரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் நன்றாக விளைந்துள்ள போதும் இவற்றுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் இக்காய்கள் வயல்களிலேயே முற்றி வீணாவதால் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரம், சிங்கந்தாகுறிச்சி, காரசேரி, பூவாணி உள்ளிட்ட சுற்றுவட்டார  பகுதிகளில் பல விவசாயிகள் சாம்பார்வெள்ளரி, வெண்டை, சீனி அவரை  ஆகியவற்றை பயிரிட்டனர். சாம்பார்வெள்ளரியும், சீனிஅவரையும் ஒன்றரை  மாத கால பயிர்கள், வெண்டை 6 மாதகால பயிராகும். தற்போது காசிலிங்கபுரத்தில் சாம்பார்வெள்ளரி வயல்களிலேயே அழுகிய நிலையில் உள்ளதோடு, வெண்டை மற்றும் சீனி அவரை போன்றவற்றை அறுவடை செய்யாமல் முற்றிய நிலையில் உள்ளது. இதுகுறித்து காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேலையா கூறுகையில் ‘‘மொத்தம் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தற்போது 4 ஏக்கரில் சீனி அவரையும், நிலக்கடலையும் பயிரிட்டேன். 1 ஏக்கரில் சாம்பார்வெள்ளரி பயிரிட்டேன். பொதுவாக அறுவடை செய்யப்படும் பயிர்களை நெல்லை டவுணில் உள்ள மொத்த மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது வழக்கம். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக சாம்பார் வெள்ளிரிக்கு ரூ.6 முதல் ரூ.20, வெண்டைக்கு ரூ.15, சீனி அவரைக்கு ரூ.6 முதல் ரூ.12 வரை கிடைத்தது. தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகபட்சமாக ஒரு கிலோ  சாம்பார்வெள்ளரி ரூ.10, வெண்டை ரூ.12, சீனி அவரை ரூ.15க்கும்  சில்லறைக்கு விற்கப்படுகிறது. இந்த விலைகுறைவால் விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கே இக்காய்களை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்போடு சாம்பார்வெள்ளரி பயிர் செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றமே மிஞ்சியது. கொரோனா காரணத்தால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் குறைந்ததால் சாம்பார்வெள்ளரி விலை வீழ்ச்சியடைந்து, விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாம்பார்வெள்ளரிக்கு போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் வயல்களிலேயே விட்டுவிட்டனர். சிலர் ஆடு, மாடுகளை மேய விட்டுள்ளனர். இதேபோல் தற்போது விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ வெண்டைக்காயை ரூ.1.50க்கும், சீனி அவரையை ரூ.6க்கும் வாங்கிச் செல்கின்றனர். உழவு, உரம், மருந்து, அறுவடை, களைபறிப்பு வேலையாள் கூலி உள்ளிட்ட உற்பத்திச் ெசலவுகள், ஏற்றுமதி இறக்குமதி செலவுகள் அனைத்தும் செய்து மாதக்கணக்கில் கஷ்டப்பட்டு காத்திருந்த விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் இக்காய்களை வயல்களிலேயே அறுவடை செய்யாமல் முற்றவிடும் நிலை உள்ளது. எனவே விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்து, விவசாயிகள் பலனடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்….

Related posts

போலீஸ் கணவன் விஷம் குடித்து தற்கொலை கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு சாவு

வேலூர் அருகே வினோத திருவிழா சிறுமிகளுக்கு திருமணம் செய்து வழிபாடு: மலை கிராம பெண்கள் மட்டும் பங்கேற்பு, ஆண்கள் வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்

உழவு செய்தபோது தந்தை கண்முன் டிராக்டரில் சிக்கி மகன் நசுங்கி பலி