நெல்லை டவுனில் மீண்டும் புத்துயிர் பெறும் கண்டிகைப்பேரி உழவர் சந்தை-வேளாண் துறை விழிப்புணர்வு பிரசாரம்

நெல்லை : அதிமுக ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட நெல்லை டவுன் கண்டிகைபேரி உழவர்சந்தை தற்போது புத்துயிர் பெற்று கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களை உழவர் சந்தைக்கு வரவழைக்கும் வகையில் அலுவலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 1999ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் உழவர் சந்தைகள் கொண்டுவரப்பட்டன. ஆரம்பகாலத்தில் 103ஆக இருந்த உழவர் சந்தை பொதுமக்களின் வரவேற்பை பெற்று தற்போது 180 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் நேரிடையாக விவசாயிகள் விற்பனை செய்வதால் விலையும் குறைவாக இருந்தது.  இதனால் உழவர்சந்தைக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உழவர் சந்தைகள் பராமரிப்பு இன்றி கண்டும் காணாது விடப்பட்டது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதிமுக ஆட்சியில் பல இடங்களில் உழவர் சந்தைகள் மூடப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், பாளை மகாராஜநகர், மேலப்பாளையம், டவுன் கண்டிகைபேரி ஆகிய இடங்களில் கடந்த 2000ம் ஆண்டில் அக்டோபர் 3ம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞரால் உழவர் சந்தைகள் துவங்கப்பட்டது. துவக்க காலத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகளில் காய்கறி விற்பனை அமோகமாக காணப்பட்டது.  அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அம்பாசமுத்திரம், டவுன் கண்டியப்பேரி உழவர் சந்தைகள் ஆட்டம் காண்டன. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்வது படிப்படியாக குறைந்தது. பொதுமக்களும் வராதநிலை தொடர்ந்தது. இந்நிலையில் கண்டிகைபேரி உழவர்சந்தை வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாளை மகாராஜநகர், மேலப்பாளையம் உழவர்சந்தைகளில் மட்டும் துவக்க காலத்தில் இருந்து தற்போது வரை விவசாயிகள் ஆர்வத்துடன் காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்துவருகின்றனர். பொதுமக்களும் தினமும் திரளாக வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளையும் மேம்படுத்த ரூ.பல கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை கண்டியப்பேரி உழவர்சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான மின்சார வசதிகள், கழிவறை, பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 80 கடைகள் உள்ள கண்டியபேரி உழவர் சந்தையில் தற்போது 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடைகளை திறந்து காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு காய்கறிகள்,  எடை மெஷின் பாதுகாப்பு அறை, உழவர் சந்தை அலுவலர் அறையும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.  முழுமையாக அனை த்து கடைகளையும் திறந்து விவசாயிகள் மூலம் காய்கறிகள் விற்பனை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு சுவர்இதுகுறித்து உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில் ‘‘அரசின் உத்தரவுக்கு ஏற்ப கண்டிகை பேரி உழவர் சந்தை புத்துயிர் ஊட்டி செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டிகைபேரி உழவர்சந்தையில் மின்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு உழவர் சந்தையைச் சுற்றி பாதுகாப்பு சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை தோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து உழவர் சந்தைகளில் விளைப்பொருட்களை விற்பனை செய்யவும்,  நெல்லை மாநகர பகுதிகளான டவுன், பேட்டை, மலையாளமேடு, திருப்பணிகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உழவர் சந்தையில் காய்கறிகளை சகாயவிலையில் வாங்கி செல்ல வேண்டி உழவர் சந்தை அலுவலர்கள் துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்’’ என்றனர்….

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு