நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது

 

நெல்லை, ஜூன் 22: நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் பகுதியில் நேற்று ஒரு ஆம்னி வேனில் சிலர் ரேஷன் அரிசி கடத்தியுள்ளனர். நம்பர் பிளேட் இல்லாத அந்த ஆம்னி வேனில் பல ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இந்நிலையில் அந்த வேன் மேலபண்டாரபுரம் கிராமத்தில் உள்ள ரோட்டின் ஒரு வளைவில் வேகமாக திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வேன் கவிழ்ந்து உருண்டு பள்ளத்திற்குள் தலைகீழாக விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி வேன் டிரைவர் மற்றும் அதில் வந்த கடத்தல்காரர்கள் வேறு ஒரு லோடு ஆட்டோவை வரவழைத்தனர். அதன் பின்னர் கவிழ்ந்த வேனுக்குள் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அதிலிருந்து மீண்டும் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர். இருப்பினும் இடிபாடுகளுக்குள் தலா 50 கிலோ எடை கொண்ட 4 ரேஷன் அரிசி மூட்டைகளை அவர்களால் கடத்திச் செல்ல முடியாமல் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து கிடந்த ஆம்னி வேனையும் 200 கிலோ ரேஷன் அரிசியையும் மீட்டு, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய கடத்தல்காரர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு