நெல்லை அருகே பேட்டையில் அதிமுக பிரமுகர் கொலையில் இருவர் கைது

பேட்டை, ஜூலை 26: நெல்லை அருகே பேட்டையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர். டாஸ்மாக் பார் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். நெல்லை அருகே பேட்டையில் கருங்காடு ரோடு மயிலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைராஜ் (52). இவரது மனைவி பொன்செல்வி. அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான பிச்சைராஜ், பேட்டை ரூரல் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்தவர். பேட்டை எம்ஜிஆர் நகரில் டாஸ்மாக் பார் நடத்தி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்ட போது வழிமறித்த மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து விரைந்துவந்த பேட்டை போலீசார், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த பேட்டை போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே கொலையான பிச்சைராஜின் உறவினர்களான பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், இவ்வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி பேட்டை காவல் நிலையம் முன்பாக சேரன்மகாதேவி சாலையில் நேற்று மதியம் திடீரென திரண்டதோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்வதாக உறுதியளித்தார்.

அதே வேளையில் அங்கு வந்த நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜாவும் மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் ஆறுதல் கூறியதோடு பேட்டை காவல் நிலையம் சென்று குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தினார். அப்போது அவரிடமும் கொலையாளிகளை விரைந்து பிடிப்பதாக துணை கமிஷனர் சரவணன் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து இத்தகவலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எடுத்துரைத்த அவர், அனைவரும் கலைந்து செல்வதோடு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இந்நிலையில் இக்கொலை வழக்குத் தொடர்பாக பேட்டை வெங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராசு மகன் பாண்டி (24) அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் நம்பித்துரை (30) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இதுகுறித்த தகவல் உறுதியானதைத் தொடர்ந்து பிச்சைராஜின் உடலை வாங்க சம்மதித்தனர். அதன்பேரில் பிச்சை ராஜின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பாண்டி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம்: கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் டாஸ்மாக் பாரில் மது வாங்குவதற்காக சென்ற நான், முறையாக வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று மது தருமாறு கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். இதை பிச்சைராஜ் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் உருவானதோடு அவரை எனது நண்பரான நம்பிதுரை என்பவருடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அடுத்த சுரங்கப்பாதை அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்த நானும், நம்பிதுரையும் சேர்ந்து எதிர்பார்த்தபடி அங்கு வந்த பிச்சைராஜை மறித்து மடக்கி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தோம் என பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை