நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் தயார்: வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அதிகாலை 5 மணிக்கு ஆஜராக வேண்டும்

நெல்லை, மே 30: நெல்லை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஜூன் 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், 7வது கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவைத்தொகுதிகளுக்கும் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்.19ம் தேதி நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மக்களவைத் தொகுதியை பொருத்தவரை நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய
6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

நெல்லை மக்களவைத் தேர்தலில் 64.10 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, நெல்லை மக்களவை தொகுதிக்கான நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரிய 306 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள், நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் பணிக்கு, முதற்கட்டமாக கணிணி சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள்-102 பேர், வாக்கு எண்ணும் உதவியாளர்கள்-102 பேர், 102 – நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 306 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் அலுவலர்கள் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை புரிந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மேலும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஜூன் 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆஜராக வேண்டும். அப்போது கணினி கலக்கல் முறையில் அவர்களுக்கான மேஜை ஒதுக்கீடு செய்யப்படும். செல்போன் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் சாதனங்களும் வாக்கு எண்ணிக்கைக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது.

பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) ராஜசெல்வி, அனைத்து சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னணி நிலவரம் அறிவிப்பிற்கு தயார்
ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் ஊழியர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் முடிவுகள், முன்னணி நிலவரம் குறித்து வெளியே பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தெரிந்து கொள்வதற்காக மாவ்டட தேர்தல் அலுவலரின் அனுமதி பெற்று அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படும். இதற்காக ஓட்டு எண்ணும் மையத்தில் ரேடியோ பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரவை பகலாக்கும் வகையில் உயர் ரக விளக்குகளும் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்