நெல்லையில் வீட்டு மனைகள் குறித்து தாசில்தார் வழங்கியது போன்று போலி ஆவணம் தயாரித்த கட்டிட கான்ட்ராக்டர் கைது

நெல்லை, ஜூலை 26: நெல்லையில் வீட்டு மனைகள் பிரிப்பதற்காக சலுகைகள் வாங்குவதற்காக சந்தை மதிப்பு தொடர்பாக தாசில்தார் வழங்கியது போன்று போலி ஆவணங்கள் தயாரித்த சென்னையைச் சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை கூட்டுறவு வீட்டு வாரிய சங்கம் மூலமாக மனைகள் பிரித்து வழங்குவதற்கு சலுகையின் அடிப்படையில் சந்தை மதிப்பு ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் மகாராஜன் (54) மற்றும் கந்தன் ஆகிய இருவரும் கடந்த மாதம் நெல்லை பேட்டை அருகேயுள்ள நரசிங்கநல்லூரில் சுமார் 1.5 ஏக்கரில் வீட்டு மனைகளை பிரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதன் சந்தை மதிப்பை போலியான ஆவணங்களாக தயாரித்து பாளையங்கோட்டை கூட்டுறவு வீட்டு வாரிய சங்கத்தில் அளித்தனர். பின்னர் இந்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த போது இந்த ஆவணத்தை நெல்லை தாசில்தார் வைகுண்டம் வழங்கியது போன்று போலியாக தயாரித்து கொடுத்த விவரம் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இதுதொடர்பாக இந்த சந்தை மதிப்பு போலி ஆவணங்களை நெல்லை தாசில்தாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நெல்லை தாசில்தார் வைகுண்டம், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்தார். இதையடுத்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரிலும் மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் ஆலோசனை பேரிலும் மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் தாசில்தார் வழங்கியது போன்று போலி சந்தை மதிப்பு ஆவணங்களை வழங்கிய சென்னை பில்டிங் கான்ட்ராக்டர் மகாராஜனை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கூட்டாளியான கந்தனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு