நெல்லையில் விளைச்சல் காரணமாக கூடுதல் மவுசு வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாழைக்கன்றுகள்

நெல்லை: நெல்லை வாழைக்கன்றுகளுக்கு கூடுதல் மவுசு நிலவுவதால், தற்போது அவை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. பணபயிராக கருதப்படும் வாழை சாகுபடியில் சில விவசாயிகள் நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் களக்காடு சுற்றுவட்டாரத்திலும், அம்பை பகுதிகளிலும் வாழை சாகுபடி அதிகம் காணப்படுகிறது. களக்காட்டில் விளைவிக்கப்படும் வாழை பொருட்கள் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பனை பொருட்களை போலவே வாழை சாகுபடியிலும், அதன் உதிரிபாகங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலனை தருகின்றன. வைகுண்டம், செய்துங்கநல்லூர் சுற்றுவட்டாரங்களில் விளையும் வாழை இலைகள் சென்னைக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வாழைத்தார், வாழைப்பழம், வாழை நார் என வாழை மரத்தின் பல பாகங்களும் விவசாயிகளுக்கு பலன் தருவதாகவே உள்ளது. களக்காடு பகுதியில் இருந்து ஏத்தன், ரசகதலி, நாட்டுகதலி உள்ளிட்ட வாழைதார்கள் கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக நெல்லை, தூத்துக்குடியில் காணப்படும் வாழைக்கன்றுகளுக்கு வெளிமாவட்டங்களிலும், கேரளாவிலும் நல்ல கிராக்கி உள்ளது.அங்கிருந்து வரும் வியாபாரிகள் இங்குள்ள வியாபாரிகளிடம் பேசி, ஒரு வாழைக்கன்று (அண்டி) ரூ.1 அல்லது ரூ.2 என விலை பேசி, அவற்றை குத்தகைக்கு எடுத்து, அவர்களே ஆட்களை நியமித்து தோண்டி எடுத்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். வாழை விளைச்சலுக்கு பின்னர் அழிமானத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள், வாழை மரங்களை அழிக்கும் பணிகளை வியாபாரிகளிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ‘‘வாழை சாகுபடியை ஒரே வயலில் தொடர்ந்து நடத்த முடியாது. எனவே ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலில் மரக்கன்றுகளை நடுவதற்கு அதிக செலவீனங்கள் ஆகிறது. குறிப்பாக ஒரு வாழைக்கன்றை பிடுங்க ரூ.3 கூலி கேட்கின்றனர். அதை வயலில் நடுவதற்கும் ரூ.3 கூலி கேட்கின்றனர்.  எனவே இத்தகைய பரிமாற்றத்திற்கு ரூ.6 செலவாகிவிடுகிறது. அதிலும் ஏத்தன் உள்ளிட்ட வாழை கன்றுகளை ஒரே நாளில் 500 வரை பிடுங்கி விடலாம். ஆனால் கதலி, நாட்டு கன்றுகள் என்றால் ஒரு நாளில் 100 கன்றுகளை பிடுங்கி நடுவது கூட இயலாத காரியம். எனவே வெளிமாவட்டங்களில் அல்லது கேரளாவில் இருந்து வியாபாரிகளிடம் வாழை மரக்கன்றுகளை விலை பேசி விற்றுவிடுகிறோம். அவர்கள் கூலி ஆட்களை அமர்த்தி வாழை கன்றுகளை பிடுங்கி கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். வயல் வெறிச்சோடி விடுவதால் அடுத்த பயிரை விளைவிக்க நாங்கள் தயாராகி விடுவோம்.’’ என்றனர். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து கொண்டு செல்லப்படும் வாழை மரக்கன்றுகளுக்கு கேரளாவில் நல்ல மவுசு காணப்படுகிறது. குறிப்பாக ஒரு மரக்கன்று அங்கு ரூ.12 அல்லது 13 என விலை போகிறது. ரூ.1 அல்லது ரூ.2க்கு நெல்லையில் இருந்து வாழை கன்றுகளை வாங்கி செல்லும் வியாபாரிகள் அங்கு விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி