நெல்லையில் ரயில் தண்டவாளங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நெல்லை: நெல்லையில் ரயில் தண்டவாளங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் நிலத்தடி நீர், சுற்றுப்புற சுகாதாரம் பாதிப்பு, கால்நடைகள் பாதிப்பு காரணமாக கேரிபேக், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளேட்டுகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தி மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடையே பிளாஸ்டிக் கேரிபேக்குகள் சகஜமாக புழக்கத்தில் உள்ளன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வழியாக அனந்தபுரி, குமரி, குருவாயூர், நெல்லை, செந்தூர், மும்பை, மற்றும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட விரைவு ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. நெடுந்தூரங்களுக்கு ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், கட்டணம் குறைவாகவும் உள்ளதால் பொதுமக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ரயில் பயணிகளில் பலரும் உணவு பொருட்கள், தின்பண்டங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கேரிபேக்குகளிலேயே கொண்டு வருகின்றனர். மேலும் பல்க் புக்கிங் மூலம் பயணம் மேற்கொள்பவர்கள் தண்ணீர் குடிக்க தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்தின் போது பயணிகள் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் கேரிபேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், டீ கப்புகள் அதிகளவு ரயில் தண்டவாளத்தில் காணப்படுகின்றன. இவை மண்ணில் மக்காத நிலையில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. கேரி பேக்குகளை தின்று கால்நடைகள் பலியாகும் சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே ரயில் பயணிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்