நெல்லையப்பர், செப்பறை அழகிய கூத்தர் கோயில்களில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை: நெல்லையப்பர், செப்பறை அழகிய கூத்தர் கோயில்களில் மார்கழி  திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்றுகாலை தொடங்கியது. நெல்லை டவுனில் பிரசித்திபெற்ற சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான மார்கழி திருவாதிரை திருவிழா இன்று (11ம் தேதி) காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருவிழா  நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 19ம் தேதிவரை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு பெரிய சபாபதி முன்னர் மாணிக்கவாசகர் எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடைபெறும். இதைத்தொடர்ந்து 20ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலமாகிய பஞ்சசபைகளில் தனித்துவமிக்க ஒன்றான கோயிலில் உள்ள தாமிரசபையில் பசு  தீபாராதனையும், 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடராஜர் திரு நடன வைபவமும்  நடைபெறும்.இதேபோல் நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறையில் உள்ள அழகிய கூத்தர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா இன்று துவங்குகிறது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. வரும் 17ம் தேதி 7ம் திருவிழாவன்று அழகிய கூத்தர் விழா மண்டபம் எழுந்தருளுதலும், மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு அழகிய கூத்தர் சிகப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 18ம் தேதி 8ம் திருவிழா காலை 10 மணிக்கு அழகிய கூத்தர் வெள்ளை சாத்தியும், மாலை 5 மணிக்கு   பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. 9ம் திருநாளான வரும் 19ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு மேல் 11.30க்குள் அழகிய கூத்தர் திருதேருக்கு எழுந்தருளும் வைபவம்  நடக்கிறது. தொடர்ந்து முற்பகல் 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தேரோட்ட வைபவம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது….

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை