நெம்மேலி குப்பத்தில் மீன் பிடி இறங்குதளம், வலை பின்னும் கூடம் கரை பாதுகாப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும்: அமைச்சரை நேரில் சந்தித்து எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வலியுறுத்தல்

திருப்போரூர், ஜூன் 8: திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்ட அறிக்கை: மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையிலும், அவர்களது உயிருக்கும், உடமைக்கும், பாதுகாப்பு அளிக்கின்ற வகையிலும், பல்வேறு நலதிட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில், கொக்கிலமேடு, கரிக்காட்டு குப்பம், செம்மஞ்சேரி குப்பம், புது கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் மீன் இறங்குதளம், மீன் வலை பின்னும் கூடம், உள்ளிட்ட பல்வேறு கரை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் சட்டமன்ற உறுப்பினராக நான் வைத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில், நெம்மேலி குப்பம், பகுதியில் கரை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என 24.1.2022 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக 2023-2024 நிதி நிலை அறிக்கை மானிய விவாத கோரிக்கையின் போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நெம்மேலி குப்பத்திற்கு மீன் பிடி இறங்குதளம் மற்றும் வலை பின்னும் கூடம் ஆகியவற்றை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹25 கோடி ஒதுக்குவதற்கு உரிய ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த பணி இன்னும் துவங்கப்டாத நிலையில், இந்த பகுதியில் தற்போது கடல் அரிப்பு அதிகரித்தும் கடல் அலைகள் படகுகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் கடந்து உட்புகுந்துள்ளதை நேரடி ஆய்வின் போது பார்த்தேன். எனவே இங்கு மீன் பிடி இறங்குதளம் மற்றும் வலை பின்னும் கூடம் மற்றும் கரை பாதுகாப்பு பணிகளை உடனடியாக துவங்கிட வேண்டுமென அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், நேரில் வலியுறுத்தினேன்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை