நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

 

கோவை, ஜூன் 1: திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே கரையூரை சேர்ந்தவர் தீபக் திலக் (45). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெங்களூரை தலைமையிடமாக கொண்டு பல பகுதிகளில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் ரூ.2 ஆயிரம் முதல் பணத்தை முதலீடு செய்தால் 15 மாதம் கழித்து முதலீடு தொகையை 3 மடங்காக வழங்குவதாக விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி திருப்பூர், கோவை, பரமத்திவேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பணத்தை கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் முதலீடு செய்தனர். சில மாதங்களுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பலருக்கு முதலீடு செய்த பணத்தை கூட திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் தீபக் திலக்கை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த சிவசண்முகம் என்பவர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் சிவசண்முகம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 11 பேர் சேர்ந்து ரூ.35 லட்சத்தை தீபக் திலக்கின் நிறுவனத்தின் முதலீடு செய்ததாகவும், ரூ.12 லட்சம் திருப்பிக்கொடுத்த நிலையில் ரூ.23 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீபக் திலக்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’