நூல் விலை உயர்வை குறைக்க கோரி பட்டுச்சேலை உற்பத்தி நிறுத்தம்: சேலத்தில் 10,000 தறிகள் இயங்கவில்லை

சேலம்: சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்தப்பட்டு உற்பத்தியாளர் சங்க அவசர நிர்வாக குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பலராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பட்டு நூல் விலை உயர்வு காரணமாக  வரும் 23ம் தேதி வரை பட்டு சேலை உற்பத்தியை நிறுத்தி வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் 10ஆயிரம் சுத்தப்பட்டு கைத்தறிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சங்க தலைவர் பலராமன் கூறியதாவது: சேலம் மாவட்டத்திற்கு பட்டு நூல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. 2020 டிசம்பர் முதல் வாரத்தில் பட்டு நூல் கிலோ ₹3,500 முதல் ₹3,600 வரை விற்று வந்தது. அதன் விலை தற்போது இரட்டிப்பு நிலையை அடைந்துள்ளது. தற்போது ₹7000 முதல் ₹7200க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு பட்டு ரகங்களின் மேல் ஏற்றப்படுவதால் விற்பனையும் சரிந்து உள்ளது. இந்த பட்டு நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் வரும் 23ம்தேதி வரை உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.  குறிப்பாக நங்கவள்ளி, வனவாசி, மேட்டூர், சிந்தாமணியூர், கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 10,000 சுத்தப்பட்டு கைத்தறிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு கூடங்கள் மூடப்படுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் 15 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மத்திய அரசு பட்டு நூல் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலையை குறைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.  இவ்வாறு பலராமன் கூறினார்….

Related posts

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து