நீலகிரி மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து நடமாடும் பகுப்பாய்வு வாகனம் மூலம் ஆய்வு

ஊட்டி: உணவு பாதுகாப்புத்துைற சார்பில் உணவு பொருட்களின் தரம் குறித்து அறிந்து கொள்வதற்காக ரூ.42 லட்சம் மதிப்பிலான நடமாடும் உணவு பரிசோதனை வாகனத்தை சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்பி., ஆகியோர் துவக்கி வைத்தனர். உணவு பொருட்களின் தரம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு கலப்படமின்றி தரமாக தயாரிக்கப்படுகிறதா? கடைகளில் விற்கப்படும் திண்பண்டங்களில் தரம் குறித்து அறிந்து கொள்ளவும், தேவைப்படும்போது தரம் உயர்த்திட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை வழங்குவதற்காகவும், ரூ.42 லட்சம் மதிப்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவு பொருட்களின் தரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நீலகிரி மாவட்டத்தில் இந்த வாகன சேவை துவக்க நிகழ்ச்சி ஊட்டி கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி தொகுதி எம்பி ஆ. ராசா ஆகியோர் கொடியசைத்து நடமாடும் உணவு தர பரிசோதனை வாகன பயன்பாட்டை துவக்கி வைத்தனர். பின்னர் பால் தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டனர். இந்த வாகனம் நேற்று ஊட்டி நகராட்சி-1 உட்பட்ட பல பகுதிகளிலும் நேரடியாக சென்று உணவு பொருட்களின் தரம் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று (27ம் தேதி) ஊட்டி நகராட்சி-2 மற்றும் வட்டத்திற்குட்பட்ட பகுதிகள், 28ம் தேதி கூடலூர் நகராட்சி மற்றும் வட்டம் பகுதிகளிலும், 29ம் தேதி குன்னூர் நகராட்சி மற்றும் வட்டம் பகுதிகளிலும், 30ம் தேதி கோத்தகிரி வட்டம் பகுதிகளுக்கு சென்று உணவு தர பரிசோதனை மேற்கொள்ள உள்ளது.

பொதுமக்கள் மற்றும் உணவு வணிக உரிமையாளர்கள் தங்கள் பகுதிகளுக்கு இந்த வாகனம் வரும் போது உணவு பொருட்கள் குறித்து தங்களுக்கு உண்டான சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளவும், உணவு பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தினை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. உணவு பொருட்களான பால், பால் பொருட்கள், சமையல் எண்ணெய், அயோடின் உப்பு, மசாலா பொருட்கள், குடிநீர், சிறு தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் உள்ள கலப்படங்கள் ஆய்வு செய்து தரத்தினை அறிந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் ஊட்டி எம்எல்ஏ கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன், ராம்குமார், கீர்த்தனா, சுனிதா நேரு, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி