நீலகிரியில் போக்கு காட்டும் மழை எமரால்டு, அவலாஞ்சி அணைகளில் உயராத நீர்மட்டம்

 

ஊட்டி, ஆக.25: நீலகிரி மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு இல்லாத நிலையில் அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ் வேலி உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரைக் கொண்டு 12 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து மின் உற்பத்தி மட்டுமின்றி குடிநீர் உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பருவமழை காலங்களில் இந்த அணைகள் நிரம்பிவிடும். இதனால், மின் உற்பத்தி, குடிநீர் தேவைகளுக்கு பாதிப்பு இருக்காது.

இதனிடையே, ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் உள்ள நீரை கொண்டு குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக அணையில் நீர் இருப்பு இருந்தது. நடப்பு ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதன் பின் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. தொடர்ந்து ஜூலை மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துதது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளிலும் மழை பெய்தது.

ஆனால், மழையின் அளவு தீவிரமடையாத நிலையில் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. அவ்வப்போது மழை பொழிவு இருந்தாலும் நீர்பிடிப்பு பகுதிகளில் அணைகள் நிரம்ப போதுமானதாக மழை இல்லை. வரும் நாட்களில் மழை பொழிவு தீவிரமடையும் பட்சத்தில் அணைகள் கணிசமான அளவு நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாத பட்சத்தில் வடகிழக்கு பருவமழை மட்டுமே ஒரே நம்பிக்கை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்