நீலகிரியில் பருவமழை தீவிரம்: விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது..! மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: நீலகிரியில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஊட்டியில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை மிகவும் தாமதமாக துவங்கியது. இருப்பினும், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் சூறாவளி காற்று வீசுவதால் அங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.  மின் விநியோகமும் தடைபடுகிறது. கடந்த நான்கு நாட்களாக ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் மழை தீவிரமடைந்தது. ஊட்டியில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று பலத்த காற்றும் வீசியதால் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பைக்காரா பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், இவ்வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் முத்தோரை அருகே சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால், இவ்வழித்தடத்திலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஊட்டியில் இருந்து குளிச்சோலை செல்லும் சாலையிலும், பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து வி.சி. காலனி செல்லும் சாலையிலும்  மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையும் தீயணைப்பு துறையினர் அகற்றினர். மரம் விழுந்ததால் மின் விநியோகமும் தடைபட்டது. மழையால், கடும் குளிர் நிலவியதால், தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான மக்கள், வீடுகளில் அடுப்புகளை வைத்து குளிர் காய்ந்து வருகின்றனர். கனமழையால் ஊட்டி அருகே உள்ள கப்பதொரை, நஞ்சநாடு மற்றும் முதொரை பாராடா ஆகிய பகுதிகளில் சில்லல்லா கால்வாய் ஓரத்தில் இருந்த விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. இதனால், சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதில், பயிரிடப்பட்டிருந்த மலை காய்கறிகள் சேதமடைந்தன. தொடர்ந்து இதே போன்ற மழை பெய்தால் இப்பகுதியில் உள்ள மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….

Related posts

கூட்டுறவு சங்கங்கள் மூலம் டி.ஏ.பி.உரம் வழங்க துரை வைகோ எம்பி கோரிக்கை

ஒரு டிரில்லியன் டாலர் லட்சிய இலக்கை அடைய சுற்றுலாத்துறையின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு

அரசியல் லாபத்திற்காக வெற்று போராட்டங்களை அறிவிக்கும் அதிமுக: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்