நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

திருச்சி, ஜூன் 28: நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பிற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருக்கக்கூடிய காலங்களில் தூர்வாரி, கொள்ளளவை உயா்த்தினால், மழைக்காலத்தில் அதிகளவு நீர் சேமிக்க இயலும் என்பதால் விவசாய பயன்பாட்டிற்காக நீர்நிலைகளில் மண்ணெடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில்தான் மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் இருந்து, தாசில்தார் அளவிலேயே எளிய முறையில் அனுமதிபெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்காகவும், மண்பாண்ட தொழிலுக்காகவும், மண், வண்டல் மண், களிமண் வெட்டியெடுக்க முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்தும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தோர் தெரிவித்ததாவது,
ராமு (மேலகொண்டயம்பேட்டை):
நான் இதே ஊரில் 40 ஆண்டுகளாக வசிக்கிகிறேன். மண்பண்டங்கள் தயாரிப்பது என் பரம்பரை தொழில். நான் இதில் விளக்கு, மண் பொம்மைகள், அடுப்பு என பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இத்தொழிலுக்கு ஆதாரமான வண்டல் மண் (களிமண்) எளிதாக கிடைக்காத நிலை இருந்தது. தற்போது முதல்வரின் அறிவிப்பின்படி வண்டல் மண்ணை, அந்தந்த ஊர் வட்டாட்சியாிடம் அனுமதி பெற்று இ.சேவை மையம் மூலம் விண்ணப்பித்து உடனே பெற்றுக்கொள்ள எளிய வழி கிடைத்துள்ளது. தமிழ்நாடு முதல்வருக்கு மண்பாண்ட தொழில் செய்வோர் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

விஜயா (மேலகொண்டயம்பேட்டை):
எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், மண்பாண்டம் தொழில் தெரிந்திருந்தும், மூலப்பொருளான களிமண் எளிதாக கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நலிவடைந்த நிலையில், இருந்து வருகிறோம். நான் ஒரு ஆள் மட்டும் தான் இந்த தொழில் செய்து வருகிறேன். மற்ற நாட்கள் எல்லாம் மண் கிடைக்காமல் வேறு பிழைப்பு தேடி சென்று வருகின்றனா். தற்போது மண் எடுக்க அனுமதி வழங்கியிருக்கும் முதலமைச்சரை மனதார பாராட்டி வாழ்த்துகிறோம்.

குழந்தைவேல் (திருவானைக்காவல்):
என் தந்தைதான் எனக்கு இந்த மண்பாண்ட தொழிலை கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு நான் தனியாக இந்த தொழிலை செய்து வருகிறேன். மண்ணால் செய்த பிள்ளையார், கொலு பொம்மை, விளக்கு வகைகள், வா்ணம் பூசப்பட்ட பொம்மை வகைகள் தயார் செய்து விற்பனை செய்கிறேன். இந்த மண் (வண்டல் மண்) எல்லா இடங்களிலும் எளிதாக கிடைப்பதில்லை. நாங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த தொழில் செய்து வருகிறோம். தற்சமயம் எங்களுக்கு நமது முதல்வர் அறிவிப்பால், மண்பாண்ட தொழிலுக்கு ஆதாரமான மண் வருவாய் துறை மூலம் எளிதாக கிடைக்கிறது. இதற்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுப்ரமணியன் (மணிகண்டம்):
முதலமைச்சா் இந்த வண்டல் மண் எடுக்க சொல்லி அனுமதி கொடுத்தது எங்களுக்கு ரொம்ப உதவியாக உள்ளது. எங்களை போன்ற விவசாயிகள் சாகுபடி நிலத்தில் கோடை காலங்களில் இந்த வண்டல் மண்களை வற்றிய நீர்நிலைகளில் இருந்து அள்ளி வந்து வயல்களில் பரவலாக கொட்டுவோம். அவ்வாறு செய்வதால் மண் வளமாகும். காய்கறி பயிர்கள் சாகுபடி செய்தால் அவற்றில் பூச்சி, நோய் தாக்குதல்கள் வராது. நல்ல முறையில் பயிர்கள் செழித்து வளரும். அதற்கு இந்த வண்டல் மண் பேருதவியாக இருக்கும். விவசாயிகளின் வயல்களை வளம் நிறைந்ததாக மாற்றிக்கொள்ள வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி.

சிவக்குமார் (அல்லித்துறை):
எங்களுக்கு வண்டல் மண் தேவையென்றால் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்கிதான் வண்டல் மண் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தது. தற்போது தேவையான வண்டல் மண்ணை எங்கள் ஊரிலுள்ள ஏரி, குளங்களில் இருந்து எடுத்துக்கொள்ள, அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் அனுமதி வாங்கி எடுத்துக் கொள்ளலாம் என்ற முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லல் படும் விவசாயியின் நிலையறிந்து எளிதாக மண் கிடைக்க செய்த முதல்வருக்கு விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மண்வளம் காக்கும்
தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி விவசாய நிலங்களில் செயற்கை உரங்கள் பயன்பாட்டை குறைத்து, உயிர் உரங்கள் பயன்பாடு, இயற்கை நுண்ணுட்ட சத்துக்கள், பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்து இயற்கையாக மண்ணின் வளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதியளித்திருப்பது மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு உயிரூட்டுவதாக அமைந்துள்ளது.

பயிர்கள் செழிக்கும்
காலம், காலமாக விவசாயிகள் கோடை காலங்களில் வற்றிய நீர்நிலைகளின் மேல் வண்டலாக படிந்திருக்கும் வண்டல் மண்ணை (பொருக்கு) சுரண்டி எடுத்து தங்கள் வயல்களில் சாணஎரு பரப்புவதை போன்று பரப்பி கொட்டுவர். நீர்நிலைகளில் மேல் வண்டலாக படிந்திருக்கும் மண்ணில் பயிருக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கும். இவற்றை நிலத்தில் பரப்புவதால் மண் வளம் கூடும் என்பதுடன், பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல் தரும்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு