நீர்வழி கால்வாய்களில் 687 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்வழிக் கால்வாய்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு கடந்த 15 நாட்களில் 687 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் மற்றும் மிதக்கும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் உதவியுடன் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பருவமழை காலத்திற்கு முன்னதாகவே நீர்வழிக் கால்வாய்களில் நவீன இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு, வண்டல்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீர்வழிக் கால்வாய்களில் 2 நவீன ஆம்பிபியன், 3 சிறிய ஆம்பிபியன் மற்றும் 4 ரொபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் கொண்டு கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 15 நாட்களில் 687 மெட்ரிக் டன் வண்டல்கள், ஆகாயத் தாமரைகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் மற்றும் குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு