நீர்மூழ்கி வீரர்கள், பொக்லைன் உதவியுடன் ஆழ்கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டனர்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே கடலில் மூழ்கிய விசைப்படகை மீனவர்கள் நேற்று உடைந்த நிலையில் மீட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமம் சுனாமி நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மதி (55). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பழையாறு சுனாமி நகரைச் சேர்ந்த ஹரிஷ் (22), புதுப்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்த அப்பு என்கிற நகுலன் (45), முத்தையா(60), ராஜதுரை (45) ஆகிய 5 பேரும் கடந்த 2ம் தேதி பழையாறு துறைமுகத்தின் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.மடவாமேடு கிராமம் அருகில் 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அன்று இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது காற்று அதிகமாக வீசியதால் எதிர்பாராதவிதமாக விசை படகு தண்ணீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 5 பேரும் மற்றொரு விசைப்படகின் மூலம் காப்பாற்றப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்தனர். விசை படகு மட்டும் கடலுக்குள் மூழ்கியது. கடலுக்குள் மூழ்கிய படகை பழையாறு மீனவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக கடலூரிலிருந்து மூன்று நீர்மூழ்கி வீரர்கள் வந்து கடலுக்குள் சென்று மூழ்கிய படகை தண்ணீருக்குள் சென்று கயிறு கட்டி பின்னர் படகின் மூலம் வெளியே இழுத்து வந்தனர். பின்னர் படகு பழையார் மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி கரைக்கு உடைந்த நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து வரப்பட்டது.இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்செழியன் கூறுகையில், ரூ.20 லட்சம் மதிப்பில் உள்ள இந்த விசைப்படகு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டது. படகில் இருந்த 5 பேரும் பத்திரமாக தப்பித்து கரையேறி விட்டனர். படகுகளுக்கு விபத்து காப்பீடு திட்டம் இல்லை. இதனால் வழக்கமாக அனைத்து படகுகளுக்கும் வழங்கப்படும் ரூ.45 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்.ஆனால் படகை இழந்த மீனவர்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. விவசாய பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கி புயல் மற்றும் வெள்ளம்ஆகிய இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது போல் விசைப்படகை இழந்த குடும்பத்தினருக்கு அரசு போதிய நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். இயற்கை சீற்றத்தால் படகு விபத்துகுள்ளாகி தண்ணீரில் மூழ்கி விட்டால் அதற்குரிய போதிய நிவாரணத்தை முதல்வர் இனிமேல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்