நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ குளவி கொட்டியதில் ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு: தீயணைப்பு வீரர் உட்பட 13 பேர் படுகாயம்

அண்ணாநகர்: சென்னை பாடி மில்லினியம் பார்க் அருகே குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனை சுத்தம் செய்யும் பணியில் கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மெட்ரோ வாட்டர் ஒப்பந்த ஊழியர்கள் கோபிநாத் (33), செல்வம் (32), கண்ணன் (33), சோமசுந்தரம் (34) ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது, நீர்த்தேக்க தொட்டியில் இருந்த விஷ குளவிகள் திடீரென பறந்து வந்து மேற்கண்ட 4 பேரையும் கொட்டியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது, 4 பேரும் வலியில் துடிப்பது தெரிந்தது. இதுபற்றி ஜே.ஜே.நகர் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 4 பேரையும் மீட்க முயன்றனர். அப்போது, அவர்களையும் விஷ குளவிகள் கொட்டியதால் மீட்பு பணிக்காக கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு விரர்களை உதவிக்கு அழைத்தனர். தன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது, அவர்களையும் குளவி கொட்டியது. இதில், தீயணைப்பு விரர்கள் தினேஷ்குமார், மலையரசன், விக்னேஷ், சரவணன், ரேணு ஆகிய 5 பேரையும் விஷ குளவிகள் கொட்டியது. இவர்களை காப்பற்ற முயற்சித்த பொதுமக்கள் என மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், 14 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், மெட்ரோ வாட்டர் ஒப்பந்த ஊழியர் சோமசுந்தரம் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்