நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக உச்ச நீதிமன்றத்தில் 66,727…ஐகோர்ட்களில் 57 லட்சம் வழக்குகள் தேக்கம்!!

புதுடெல்லி:உச்சநீதிமன்றத்தில் 66 ஆயிரம் வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 57 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை உட்பட 5 மாநில உயர்நீதிமன்றங்களில் மட்டும் 54 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறை ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில், ‘இந்தாண்டு மார்ச் 1ம் தேதியின்படி, உச்ச நீதிமன்றத்தில் 66,727 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34 ஆகும். தற்போது 8 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தற்போது 25 ஆண் மற்றும் 1 பெண் நீதிபதிகள் உள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1,098 என்ற நிலையில், 454 பணியிடங்கள் காலியாக உள்ளன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 160 ஆகவும், சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் குறைந்தபட்ச அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 3 ஆகவும் உள்ளது. இருந்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 66 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட 72 நீதிபதிகளில் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் மட்டும் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 40 சதவீதம் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் பழமையானவை. நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில், அலகாபாத் (உத்தரபிதேசம்), பஞ்சாப் – அரியானா, சென்னை (தமிழ்நாடு), பம்பாய் (மகாராஷ்டிரா), ராஜஸ்தான் ஆகிய ஐந்து (மாநிலம்) உயர் நீதிமன்றங்களில் மட்டுமே 54 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன. காலியாக உள்ள நீதிபதி பதவிகளுக்கான பட்டியலின்படி பார்த்தால், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் 39 பேர் (அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் 85 பேர்), சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 பேர் (75 பேர்), மும்பை உயர்நீதிமன்றத்தில் 31 பேர் (94 பேர்), ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 27 பேர் (50 பேர்) பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 5,000க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன’ என்று அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்: மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!!