நீண்ட நாட்களுக்கு பின்னர் குவிந்த சுற்றுலா பயணிகள்: வியாபாரிகள், விடுதி உரிமையாளர் மகிழ்ச்சி

ஊட்டி: மூன்று நாள் தொடர் விடுமுறை வந்த நிலையில், பல நாட்களுக்கு பின் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நீலகிரி  மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச்  செல்கின்றனர். குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா  பயணிகள் வருவார்கள். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில்  இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்தே  காணப்பட்டது. இதனால், சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை  நம்பி தொழில் செய்யும் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 10  நாட்களுக்கு முன் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால்,  தற்போது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. விநாயகர்  சதுர்த்தி, வார விடமுறை என 3 நாட்கள் விடுமுறை வந்த நிலையில், நேற்று  முன்தினம் முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.  நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதேபோல்,  படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் பைக்காரா போன்ற சுற்றுலா தலங்களிலும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள்  வாகனங்களால் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. பல  நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் காட்டேஜ்கள்  மற்றும் லாட்ஜ்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள்  வருகை அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு வியாபாரிகள்  மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குன்னூர்: மூன்று நாட்கள் தொடர் விடுமுறையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்  குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தந்தனர். இதனால் வியாபாரிகள் மற்றும் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்த நிலையில் கடந்த மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில்  இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வரத்துவங்கியுள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால்  வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் காலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.  சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலை குறைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தற்போதுதான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள வணிகர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட காலம் கழித்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பூங்கா ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் தொடக்கம்..!!

காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!!

இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்கு!!