நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதி: ராமதாஸ் அறிக்கை

சென்னை: நீட் விலக்கு சட்டத்திற்கு செய்யப்படும் ஒவ்வொரு மணி நேர தாமதமும் மாணவர்களுக்கு மிக மோசமான  பாதிப்புகளை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: நாடாளுமன்ற மக்களவையில் நீட் விலக்கு தொடர்பான வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், ‘ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் அனைத்து சட்ட மசோதாக்களும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் தான் கையாளப்படும். ஆனால், நீட் விலக்கு சட்ட மசோதா எதுவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு வந்ததாக தகவல் இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார். குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதியளித்து 12 நாட்களாகி விட்ட நிலையில், நீட் விலக்கு சட்டம் இது வரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பது மக்களவையில் அளிக்கப்பட்ட விடையின் மூலம் உறுதியாகியிருக்கிறது. நீட் விலக்கு சட்டம் என்பது பொதுப்பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வி என்ற பொருள் சம்பந்தப்பட்டது. இதில் ஆய்வு செய்வதற்கோ, சட்ட ஆலோசனை பெறுவதற்கோ எந்தத் தேவையும் இல்லை.  நீட் விலக்கு சட்டத்தில் ஆளுநர் முடிவெடுக்க எதுவும் கிடையாது; அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது தான் ஆளுநரின் பணி. ஆனால், இதுகுறித்து முதல்வர் நேரில் வலியுறுத்திய பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதியாகும். 2022-23ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான அறிவிக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்பிறகு நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் செய்யப்படும் ஒவ்வொரு மணி நேர தாமதமும் மாணவர்களுக்கு மிக மோசமான  பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும். இந்த அவசரத்தை தமிழக அரசும் புரிந்து கொண்டு நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்